
நாங்குநேரி அருகே மணல் கடத்தல் கும்பலை பிடிக்க சென்ற தனிப்பிரிவு காவலர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சிந்தாமணியை சேர்ந்த ஜெகதீஸ் துரை (33). இவர் கடந்த 2008ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். கடந்த இரு ஆண்டுகளாக நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இரவில் பரப்பாடி அடுத்துள்ள கக்கன்நகர் பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து சிலர் டிராக்டரில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தனிப்பிரிவு காவலர் ஜெகதீஸ்துரை தனது மோட்டார் சைக்கிளில் அப்பகுதிக்கு விரைந்து சென்றார். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த டிராக்டரை அவர் நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் டிராக்டரில் வந்தவர்கள் அதிவேகத்தில் டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஜெகதீஸ்துரை டிராக்டரை விரட்டிச் சென்றுள்ளார்.
இதைப்பார்த்த மணல் கடத்தல் கும்பல் பரப்பாடிக்கு தென்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு டிராக்டரை ஓட்டி சென்றனர். அங்கு இருந்த இடத்தில் மணலை தட்டி விட்டி டிராக்டரை எடுக்க முயன்ற போது, டிராக்டர் அங்கு போடப்பட்டிருந்த இரும்பு கம்பியால் ஆன வேலியில் சிக்கி கொண்டது. மணல் கடத்தல் கும்பல் டிராக்டரை மீட்க முயற்சி செய்தனர். அப்பொழுது தனிப்பிரிவு காவலர் ஜெகதீஸ்துரை அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மணல் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் இரும்புகம்பியால் ஜெகதீஸ்துரையை தலையில் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
ஏற்கனவே மணல் கடத்தல் டிராக்டரை விரட்டி சென்றபோது ஜெகதீஸ்துரை செல்போன் மூலம் விஜயநாராயணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் இரவில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே இன்று அதிகாலை அவர் மணல் கடத்தல் கும்பலால் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நெல்லை எஸ்.பி. அருண் சக்திகுமார் தலைமையில் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
போலீஸ் மோப்பநாய், தடவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடந்து வருகிறது. மணல் கடத்தல் கும்பலால் காவலர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் தொடர்புடைய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். போலீஸ்காரர் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட காவலர் ஜெகதீஸ்துரைக்கு 4 வயதில் மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.