புதன், 3 ஜூன், 2020

வெப்ப மண்டலப் புயல்: 130 ஆண்டுகளுக்கு பிறகு மகாராஷ்டிராவை தாக்குகிறது

இந்த ஆண்டில் இந்தியா எதிர்கொள்ள இருக்கும் இரண்டாவது புயல் அரபிக் கடலில் இருந்து மகாராஷ்ட்ராவை நோக்கி நகரத் துவங்கியுள்ளது. தற்போது மகாராஷ்ட்ராவிற்கு 700 கி.மீ தொலைவிற்கு அப்பால் இருக்கும் நிசார்கா என்று பெயரிடப்பட்ட இந்த புயல் நாளை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 105 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் முதல்வர் உத்தவ் தாகக்ரே வலியுறுத்தியுள்ளார். ஜூன் மாதத்தில் உருவாகும் புயல் வெப்பமண்டல புயல் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு இது போன்ற ஒரு புயல் 1891ம் ஆண்டு தான் ஏற்பட்டது.

மும்பையில் பெரும் தாக்கத்தை இந்த புயல் ஏற்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்யாண், வசாய், நவி மும்பை, பத்லாப்பூர், அம்பர்நாத் போன்ற இடங்களிலும் கடுமையான பாதிப்புகள் உருவாகக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1948ம் ஆண்டு மற்றும் 1980ம் ஆண்டு ஜூன் மாதங்களில் இரண்டு புயல்கள் மும்பையை நெருங்கி வந்த போதும் அவை சூறாவளியாக உருமாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாளை ஹர்ஹரேஸ்வர் மற்றும் டாமன் இடையே நாளை பிற்பகலில் இந்த நிசர்கா புயல் கரையை கடக்கிறது.

ரெட் அலர்ட் : நிசார்கா புயல், ஜூன் 3ம் தேதி பிற்பகலில் மகாாராஷ்டிராவின் அலிபாக் மசற்றும் ராய்காட்டின் ஹரிஹரேஸ்வர் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மும்பை, தானே, பல்கார் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஜூன் 4ம் தேதி வரை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேரிடர் மீட்பு படைகள் விரைவு : நிசார்கா புயலால் அதிகம் பாதிப்பிற்குள்ளாகும் என்று கணிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் பேரிடர் மீட்பு பணிகளை மேற்கொள்ள 33 தேசிய பேரிடர் மீட்பு படைகள் சம்பவ பகுதிகளுக்கு விரைந்துள்ளன.