புது அரசியல் வரைபடத்திற்கு சட்டவடிவம் கொடுக்கும் அரசியலமைப்பு திருத்த மசோதா நேபாள பாராளுமன்றத்தின் கீழவையில் இன்று ஒரு மனதாக நிறைவேறியது. இதன் மூலம், இந்தியா எல்லையில் உள்ள லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகள் மீது நேபாளாம் அதிகாரப்பூர்வமாக உரிமை கோரியது.
நேபாளின் தேசிய சின்னத்தை புதிய அரசியல் வரைபடத்தோடு புதுப்பிப்பதற்கான அரசியலமைப்பின் 3 வது அட்டவணையை இந்த சட்ட மசோதா திருத்துகிறது. நேபாளி காங்கிரஸ் (என்.சி), ராஸ்திரிய ஜனதா கட்சி-நேபாளம் (ஆர்ஜேபி-என்) ராஸ்திரியா பிரஜாதந்திர கட்சி (ஆர்.பி.பி) உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் சட்ட மசோதாவிற்கு ஒருமனதாக வாக்களித்தன.
இந்தியாவுடனான எல்லை பதட்டத்திற்கு மத்தியில், ஜூன் 9ம் தேதியன்று புதிய அரசியல் வரைபடத்தை அங்கீகரிப்பதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை பரிசீலிக்க நேபாள நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, அடுத்த கட்டமாக தேசிய சட்டப்பேரவையில் (மேலவையில்) விவாதிக்கப்படும். ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி அங்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கீழவை சட்ட உறுப்பினர்கள் மசோதாவின் விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யக் கூடிய 72 மணி நேர கால அவகாசத்தை தேசிய சட்டப்பேரவை வழங்கும்.
தேசிய சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றிய பின்னர், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின்னர், மசோதா அரசியலமைப்பு சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் .
சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதி தொடர்பான வரலாற்று உண்மைகளையும் ஆதாரங்களையும் சேகரிக்க நேபாள அரசு கடந்த புதன்கிழமை ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. எவ்வாறாயினும், புதிய அரசியல் வரைபடம் ஏற்கனவே வெளியிடப்பட்டு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட பின்பு, நிபுணர் குழுவின் அவசியன் என்ன என்று அந்நாட்டின் இராஜதந்திரிகள் மற்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். ‘
கடந்த மே 8 ஆம் தேதி, மன்சரோவர் யாத்திரை பாதையின் ஒரு பகுதியாக உத்தரகாண்ட் மாநிலத்தின் தர்ச்சுலா பகுதியில் இருந்து லிபுலேக் கணவாய் செல்லும் சாலையை, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்ததையடுத்து இந்தியா-நேபாள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து, லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை நேபாளத்தின் பகுதிகளாக சித்தரிக்கும் புதிய அரசியல் வரைபடத்தை நேபாள அரசு வெளியிட்டது. சாலை தனது எல்லைப் பகுதிக்குள் வருவதாக கூறிய இந்தியா நேபாளின் உரிமை கோரலை நிராகரித்தது.
நியாயப்படுத்தமுடியாத அரசியல் வரைபடத்தை திணிக்காமல் , இந்தியாவின் இறையாண்மையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதிக்க நேபாள அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நிலுவையில் உள்ள எல்லைப் பிரச்சினைகளைத் தீர்க்க உயர்மட்ட உரையாடலுக்கு சாதகமான சூழ்நிலையை நேபாளம் உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா முன்னதாக தெரிவித்திருந்தார்.