திட்டமிடப்பட்ட சர்வதேச வர்த்தக விமானங்களுக்கான தடையை இந்தியா, நவம்பர் 30 வரை நீட்டித்துள்ளது. கடந்த மாத அன்லாக் வழிகாட்டுதல்களின் நீட்டிப்புக்கு ஏற்ப இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கும், இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கும் செல்ல விரும்புவோர், வந்தே பாரத் மிஷனின் அடிப்படையில் திருப்பி அனுப்பும் விமானங்களையோ அல்லது மற்ற நாடுகளுக்குள் இந்தியா நுழையும் ‘ஏர் பபுள்’ ஏற்பாடுகளையோ சார்ந்து இருக்க வேண்டிய நிலைதான் அது.
திட்டமிடப்பட்ட சர்வதேச வர்த்தக விமானங்களுக்கான தடையை இந்தியா ஏன் நீட்டித்தது?
வழக்கமான சர்வதேச நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது கொரோனா வைரஸின் தன்மையைப் பொறுத்தது என்று அரசாங்கம் கூறியுள்ளது. சர்வதேச பயணங்கள் மூலம் வைரஸ் பரிமாற்ற அச்சுறுத்தல் இன்னும் இருப்பதால், வழக்கமான விமான நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. அன்லாக் வழிகாட்டுதல்களை அரசாங்கம் நீட்டிப்பதன் மூலம், சர்வதேச விமான நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சர்வதேச விமானங்களுக்கு முன்னோக்கிச் செல்லும் வழி எது?
தற்போது, சர்வதேச அளவில் பயணம் செய்ய விரும்புவோர் இந்தியாவின் ‘ஏர் பபுள்’ ஏற்பாடுகளைச் சார்ந்து இருக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி, 19 நாடுகளுடன் ஏர் பபுள் அல்லது போக்குவரத்து தாழ்வார ஏற்பாடுகளில் இந்தியா அடிவைத்திருக்கிறது. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பஹ்ரைன், பூட்டான், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஈராக், ஜப்பான், கென்யா, மாலத்தீவுகள், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, உக்ரைன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இவற்றில் அடங்கும். மேலும், பல நாடுகளுக்கு வந்தே பாரத் விமானங்களும் இயக்கப்படுகின்றன. தொற்றுநோயின் தன்மையைக் கருத்தில் கொண்டு, சர்வதேச துறைகளில் வழக்கமான வணிக நடவடிக்கைகள் மார்ச் 2021 வரை நிறுத்தி வைக்கப்படலாம் என்று தொழில்துறை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றனர்.
சர்வதேச விமான இடைநீக்கத்தின் தாக்கம் என்ன?
கடந்த வியாழக்கிழமை, 2020-21 நிதியாண்டிற்கான சர்வதேச விமான பயணிகள் எண்களுக்கான கணிப்பை விமான ஆலோசனை CAPA திருத்தியது. வழக்கமான திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவதில் தாமதமானதின் விளைவாக, முந்தைய மதிப்பீடான 10-15 மில்லியன் பயணிகளோடு ஒப்பிடும்போது, இம்முறை 8-10 மில்லியன் பயணிகள் மட்டுமே சர்வதேச அளவில் பயணிக்க எதிர்பார்க்கப்படுகிறார்கள். வெளிநாட்டு வர்த்தக பயணிகள் மற்றும் ஓ.சி.ஐ வைத்திருப்பவர்கள் மீண்டும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டாலும், ஓய்வு நேரப் பார்வையாளர்கள், வி.எஃப்.ஆர் (நண்பர்கள் மற்றும் உறவினர்களைக் காண வருபவர்கள்) பயணிகள் (என்.ஆர்.ஐ-க்கள் அல்லது ஓ.சி.ஐ-க்களை இல்லாமல் இருக்கும் பட்சத்தில்) மற்றும் மருத்துவ சுற்றுலாப் பயணிகளுக்கு இந்திய வருகை மூடப்பட்டுள்ளது எனத் தனது அறிக்கையில் கூறியுள்ளது. “எல்லைக் கட்டுப்பாட்டு கண்ணோட்டத்தில் கோவிடுக்கு முந்தைய போக்குவரத்தில் 60% மட்டுமே நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டது. இதில் பெரும்பான்மையானவர்கள் தற்போது சர்வதேச பயணத்துடன் தொடர்புடைய அபாயங்கள் மற்றும் சிரமங்களுக்கு ஏற்ப பயணத்தை ஒத்திவைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.