புதன், 9 டிசம்பர், 2020

மரங்களுக்கு நடுவே கட்டப்படும் பாலங்கள் வனவிலங்குகளுக்கு உதவுமா?

 உத்திரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் வனத்துறை வனங்களில் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவகையில், சிறிய வகை விலங்குகளுக்காக பாலங்களை கட்டியுள்ளது (Eco-bridge). எக்கோ ப்ரிட்ஜ் என்றால் என்ன? அது ஏன் முக்கியமாகிறது என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

இந்த மரப்பாலங்கள் ஏன் முக்கியமானவை?

நெடுஞ்சாலைகள் மற்றும் இதர கட்டுமானங்கள் காரணமாக வனவிலங்குகளின் வழிப்பாதை தொந்தரவுக்கு ஆளாக கூடாது என்பதற்காக இந்த மரப்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. குரங்குகள், அணில்கள் மற்றும் இதர மர வாழ் (Arboreal) உயிரினங்களுக்காக இந்த வகை மரப்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. கான்க்ரீட்டால் சாலைகளுக்கு மேல் அல்லது கீழ் செல்லும் வழித்தடங்கள் (குறிப்பாக பெரிய விலங்குகளுக்கு), ஆம்பியன் சுரங்கங்கள் மற்ரும் கல்வெர்ட்கள் ஆகியவை அமைக்கும் பணி அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) மேற்கொண்ட 2020 ஆய்வில், அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் கட்டுமானத்திற்காக கிட்டத்தட்ட 50,000 கி.மீ சாலை திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அதே நேரத்தில் பல நெடுஞ்சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மேம்படுத்தப்படுகின்றன. புது தில்லியில் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், அசாமில் உள்ள காசிரங்கா-கர்பி அங்லாங் நிலப்பரப்பு வழியாக தேசிய நெடுஞ்சாலை 37, மற்றும் கர்நாடகாவின் நாகர்ஹோலே புலிகள் சரணாலயம் வழியாக மாநில நெடுஞ்சாலை 33 போன்ற வனவெளியை ஒட்டி நடைபெற இருக்கும் திட்டங்களை அடையாளம் கண்டுள்ளது.

கலதுங்கி – நைனிடால் நெடுஞ்சாலையின் இருபுறமும் அமைந்திருக்கும் ராம்நகர் வனச்சரகத்தின் வன அதிகாரி சந்திர சேகர் ஜோஷி புதிதாக கட்டப்பட்ட இந்த 90 அடி பாலத்தை மேற்பார்வையிட்டார். இந்த பகுதியில் மோனிட்டர் லிஜார்ட் போன்ற ஊர்வன பலவும் அடிபட்டு இறப்பதை நாங்கள் கண்காணித்தோம். அதிக அளவு சுற்றுலாவாசிகள் செல்லும் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க இது ஒரு விழிப்புணர்வாக கருதப்படுகிறது. இந்த பாலம் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் ஊர்வனவற்றை பாதுகாக்கும். ஊர்வனவற்றை உட்கொள்ளும் பாம்புகளும், பாம்புகளை உட்கொள்ளும் கழுகுகளுக்கும் இது ஒரு தேவையான வழிமுறையாகும் என்று கூறினார்.

பில்டர்கள் இதனை எப்படி பார்க்கின்றனர்?

சுற்றுச்சூழல் பாலங்களை உருவாக்குவதில்அளவு மற்றும் இடம் என இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன என்கிறார் WII-இன் விலங்கு சூழலியல் மற்றும் பாதுகாப்பு உயிரியலின் தலைவர் பிலால் ஹபீப். நீங்கள் ஒரு சாலை விபத்தை பார்க்கும் போது அங்கு ஒரு விலங்கு இறக்கிறது என்று கற்பனை செய்து அங்கு பாலம் வைக்கிறீர்கள். ஆனால், இது போதுமானதாக இருக்காது. சில காலங்களுக்கு பிறகு நீங்கள் அங்கு விபத்தை பார்க்க மாட்டீர்கள் ஏன் என்றால் அந்த சாலைகள் விலங்குகளுக்கு ஒரு சுவர் போன்று மாறிவிடும். இருவழி சாலைகள் நான்கு வழி சாலையாக மேம்படுத்தப்படும் போது, நீங்கள் இழப்புகளை பார்க்கமாட்டீர்கள். ஆனால் அது பசுமை நெடுஞ்சாலைகளாக மாறிவிட்டது என்று அர்த்தம் அல்ல. ஆகவே இப்பகுதியில் விலங்குகளின் வாழ்விடங்கள், இடையூறு வகைகள், சாலை நீளம் மற்றும் அதன் வளைவு ஆகியவற்றை புரிந்துகொள்வது முக்கியம்”என்று அவர் கூறினார்.

விலங்குகளின் இயக்க முறைகளை பொறுத்தே இந்த பாலங்களின் இடைவெளி மற்றும் பயன்பாடு உறுதியாகும். பெரிய பாலங்கள் வழியாக சாம்பர், புள்ளி மான், நில்கை, காட்டு பன்றி ஆகியவை பயன்பெறும். அதே நேரத்தில் அவை 5 மீட்டராக இருந்தாலும் சரி, 500 மீட்டராக இருந்தாலும் சரி புலிகள் மற்றும் சிறுத்தைப் புலிகளை அவை பாதிப்பதில்லை. குரைக்கும் மான் போன்ற சில விலங்குகள் மூடப்பட்ட வாழ்விடங்களையே அதிகம் தேர்வு செய்யும் என்பதால் அவைகளுக்கு குறுகிய அளவில் அமையும் பாலங்கள் தேவைப்படும் என்றும் ஹபீப் கூறினார்.

இருக்கும் சவால்கள் என்னென்ன?

இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் மூத்த விஞ்ஞானியான திவ்யா முடப்பா, தமிழ்நாட்டின் ஆனமலை தொடர்களில் பணிபுரிகிறார், சிங்கவால் குரங்குகள் (lion-tailed macaques) மற்றும் நீலகிரி லாங்கர்களுக்காக ( Nilgiri langurs) இப்படியான பாலங்கள் உருவாக்கப்பட்டது. “2008 ஆம் ஆண்டில், 3 கி.மீ நீளத்திற்கு ஆறு பாலங்களை நாங்கள் கட்டினோம், இதனால் ஆர்போரியல் விலங்குகள் சுதந்திரமாக பயணிக்க இயலும் என்று புரிந்தது. எங்கள் மிகச்சிறிய பாலம் சுமார் 10மீ நீளத்திலும் மிக நீளமான பாலம் 25 மீ நீளத்திலும் அமைந்தது. குரங்குகள் மிக விரைவாக இதனை பயன்படுத்த துவங்கின என்றார் அவர்.

கன்ஹா – பெஞ்ச், பெஞ்ச் – நவேகான் – நாக்சிரா காரிடர்களை பல்வேறு இடங்களில் சந்திக்கும் தேசிய நெடுஞ்சாலை 44ல் ஹபீபின் குழுவினர் ஆராய்ந்ததை நினைவு கூறுகிறார் ஹபீப். வனத்திற்குள் செல்லும் 6.6 கி.மீ சாலையில் கட்டப்பட்டுள்ள 5 அண்டர்பாஸ்கள் மற்றும் 4 சிறிய பாலங்கள் இந்தியாவின் வெற்றிக் கதைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த அண்டர்பாஸ்கள் மூலமாக புலி, சிறுத்தைப் புலி மற்றும் குள்ளநரி உள்ளிட்ட 18 விலங்குகளை அவர்கள் கைப்பற்றினார்கள்.

இங்கு 750 மீட்டர் நீளமுள்ள பெரிய பாலம் உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய அண்டர்பாஸாகும். ஆனால் எங்களின் 50 மீட்டர் பாலத்தில் ஸ்லோத் கரடிகளும், பெண் நீல்கைகளும் பயணிக்கவே இல்லை. இந்த 750 மீட்டர் பாலத்தில் ஸ்லோத் கரடிகள் பயணிக்க 2 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. ஓநாய் மற்றும் பங்கோலின் பயணிக்க ஒரு வருடத்திற்கும் குறைவான நேரத்தை எடுத்துக் கொண்டது. அதே நேரத்தில் புள்ளிமான்கள் மற்றும் காட்டுப்பூனைகள் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே நேரம் எடுத்துக் கொண்டது.

விலங்குகளின் பாதுகாப்பிற்காக 1.4 கி.மீ. மிகப் பெரிய அண்டர்பாஸ் ஒன்று மத்தியப்பிரதேசம்-மகாராஷ்டிரா எல்லையில் கட்டப்பட்டு வருகிறது. சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓசூர்-கிருஷ்ணகிரி பிரிவில், யானைக் வழித்தடத்திற்காக பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு அருகில் ஒரு திட்டமும், மகாராஷ்டிராவின் சந்திரபூரில் உள்ள தடோபா-அந்தாரி புலிகள் பாதுகாப்பு பகுதியிலும் இப்படியாக ஒரு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.