ஞாயிறு, 13 டிசம்பர், 2020

எலுரு மர்ம நோய்: பாதிப்புக்கான காரணம் என்ன?

  ஆந்திரப் பிரதேசத்தின் எலுரு நகரில், 500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நோய்க்கான காரணம் கண்டறியப்படவில்லை.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  பெரும்பாலான  நோயாளிகள் சில மணி நேரங்களில் குணமடைந்து வீடு திரும்பி வருவதாக எலுரு நகரில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.  ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து வயதினரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்ம் தெரிவிக்கப்பட்டது.

சனிக்கிழமை இரவு குறைந்தது 90 பேர் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்து சிகிச்சைப் பெற்று வருபவர்களின்  எண்ணிக்கை குறையும் போக்கு தொடர்கிறது.

நேற்று, 20 க்கும் குறைவானோர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அதில் பெரும்பாலோனருக்கு வலிப்பு போன்ற அபாய அறிகுறிகள் காணப்படவில்லை.

எலுரு  மர்ம நோய்  : காரணம் என்ன? 

மாநில அரசு அனுப்பி வைத்த 45 குழந்தைகளின் ரத்த மாதிரிகளில், 25ல்  காரீயம்  மற்றும் நிக்கலின் தடயங்களைக் புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் கண்டறிந்தது. பாதிப்புக்கான காரணம் கண்டறிய உதவும் விரிவான அறிக்கைக்கு பொது சுகாதார வல்லுநர்களும், பலதரப்பட்ட விஞ்ஞானிகளும் காத்திருக்கின்றனர். தண்ணீரில் உள்ள கன உலோக அயனிகள் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.  குடிநீர் ஆதாரங்களில் பூச்சிக்கொல்லி கலக்கப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.

கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, குடிநீர் வழங்கல் நிலையில் அதிகப்படியான குளோரின் மாத்திரைகள், பிளீச்சிங் பவுடர் மற்றும் ஹைட்ரோகுளோரைட் கரைசல் ஆகியவற்றைப் பயன்படுத்தியதால் நீர் மாசுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் மாவட்ட நிர்வாகமும், எலுரு மாநகராட்சி அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

எலுரு நகரில் இருந்து நீர், இரத்தம், உணவு மாதிரிகளை  சேகரித்த ஹைதராபாத் தேசிய ஊட்டச்சத்து நிறுவன  (என்ஐஎன்) வல்லுநர்கள் காரீயம் (Lead) மாசுபாட்டிற்கான அறிகுறிகள் இருப்பதாக கருதுகின்றனர். இருப்பினுனம், விரிவான சோதனை அறிக்கைகளுக்குப் பிறகுதான் எதையும் உறுதிப்படுத்த முடியும்.

 

கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளோடு இணைக்கப்பட்ட  கால்வாய்கள் மூலம் எலுரு நகர மக்கள் தண்ணீரைப் பெறுகின்றனர். குடிநீர் கால்வாய்கள் விவசாய வயல்கள் வழியாக செல்கின்றது. எனவே, பூச்சிக்கொல்லி மருந்து, ரசாயனங்கள் கலந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், எலுரு மர்ம நோயின் பல அம்சங்கள் விஞ்ஞானிகளை குழப்பிவருகிறது. விற்பனை செய்யப்படும் பாட்டில் குடிநீரை பயன்படுத்துவோரும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று,  குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பது விஞ்ஞானிகளை பெரிதும் குழப்புகிறது. எலுரு நகரல் மட்டும் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றாலும்,  மாநகராட்சிக்கு வெளியே குடிநீர் வழங்காத பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

விசாரணை? 

ரத்தம், நீர் மற்றும் பால் மாதிரிகளை எய்ம்ஸ் மருத்துவமனையின் நச்சுக் கட்டுப்பாடுக் குழு ஆய்வு நடத்தி வருகிறது. ஹைதராபாத்  செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (சி.சி.எம்.பி)  வைரஸ் தொற்று வாய்ப்புகள் குறித்து பரிசோதித்து வருகிறது.

ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனம், கனரக உலோகங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் தடயங்களுக்காக சிறுநீர், இரத்தம், நீர், காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற நுகர்பொருட்களின் மாதிரிகளை சோதித்து வருகிறது. இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் பூச்சிக்கொல்லிகளின் தடயங்களுக்கு நீர் மற்றும் இரத்த மாதிரிகளை பரிசோதித்து வருகிறது.

நிலைமையைக் கண்காணிக்க  உலக சுகாதார நிறுவனத்தின் இரண்டு உறுப்பினர்கள்  அடங்கிய குழு எலுருவில் முகாமிட்டுள்ளது.  குண்டூர், கிருஷ்ணா மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  ஆனால் காரீயம் அல்லது பூச்சிக்கொல்லிகளின் தடயங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

 

முன்னதாக, ஆந்திராவின் கோதாவரி மாவட்ட ஆட்சியரை, குடியரசு துணைத் தலைவர் தொடர்பு கொண்டு, ஆரம்ப கட்டத் தகவலை கேட்டறிந்தார். அதன்பின் மங்கலகிரி மற்றும் தில்லியில் உள்ள எய்ம்ஸ் இயக்குனர்களிடம் இது குறித்து குடியரசுத் துணைத் தலைவர் பேசினார். குழந்தைகளின் ரத்த மாதிரிகள் தில்லிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது.