செவ்வாய், 29 டிசம்பர், 2020

இலங்கைக்கு 20 டன் மஞ்சள் கடத்தல்: அடுத்தடுத்து தொடர்வது ஏன்?

 கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக, இலங்கை அரசு அந்நாட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக, மஞ்சளை இறக்குமதி செய்ய தடைவிதித்ததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 20 ஆயிரம் கிலோ மஞ்சளை இலங்கை போலீசார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்துள்ளனர்.

பொதுவாக இந்தியாவில் இருந்து அல்லது தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் கடத்தப்படுவதும் அவை பறிமுதல் செய்யப்பட்டதையும் செய்தியாக படித்திருப்போம். ஆனால், இப்போது உணவுப் பொருளான மஞ்சள் கடத்தப்பட்டு அதனை இலங்கை போலீசார் பறிமுதல் செய்துள்ளது நடந்துள்ளது.

இந்தியாவில் இருந்து இல்ங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவதும் இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் தொடர்ச்சியாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவதும் அவை இலங்கை போலீசாரிடம் சிக்கி பறிமுதல் செய்யப்படுவதும் நடந்து வருகிறது. அப்படி, பறிமுதல் செய்யப்படும் மஞ்சளை இலங்கை அரசு அழித்தும் வருகிறது. இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவது ஏன் என்பதையும் அதற்கு காரணம் என்ன என்றும் பார்ப்போம்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக இந்த ஆண்டு இலங்கை அரசு அந்நாட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக, வெளிநாடுகளில் இருந்து மஞ்சளை இறக்குமதி செய்யத் தடை விதித்தது. இதனால், அந்நாட்டில் மஞ்சள் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 20,000 கிலோ (20 டன்) மஞ்சளை இலங்கை போலீசார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்துள்ளனர்.

“சரக்குகள் ஏற்றப்பட்ட ஒரு ஆழ்கடல் மீன்பிடி படகை பிடித்துள்ளோம். இது இந்தியாவிலிருந்து வந்ததாக நாங்கள் சந்தேகிக்கிறோம். இது இலங்கைக்கு தெற்கு கடற்கரையோரப் பிடிக்கப்பட்டுள்ளது” என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கையைத் தாக்கிய கொரோனா வைரஸ் தொற்று அதன் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. அதனால், இலங்கை அரசு இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும் உள்ளூர் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கவும் முடிவு செய்தது.

இலங்கை ஆண்டுதோறும் 7,000 டன் மஞ்சளைப் பயன்படுத்துகிறது. கொரோனா வைரஸ் அந்நாட்டில் பரவும் வரை இலங்கை கிட்டத்தட்ட 5,000 டன் மஞ்சளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்தது. இதனால், ஏற்பட்ட மஞ்சள் பற்றாக்குறையால், இலங்கையின் தலைநகர் மற்றும் பிற மாகாணங்களில் நுகர்வோர் நியாயமான விலையில் மஞ்சளை வாங்குவது கடினமாக உள்ளது. இலங்கை அரசு அந்நாட்டில் ஒரு கிலோ மஞ்சள் தூளுக்கு அதிகபட்சமாக இலங்கை ரூபாய் மதிப்பில் 750 (ரூ.291) என்று நிர்ணயித்திருந்தாலும், கருப்பு சந்தையில் ஒரு கிலோ மஞ்சள் தூள் இலங்கை ரூபாய் மதிப்பில் 5,000-க்கு (இந்திய ரூபாய் மதிப்பில் 1,940) விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கை வேளாண் துறை அதிகாரிகள் 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் அந்நாட்டில் உற்பத்தி அதிகரிக்கும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால், அது இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்கள் உள்ளூர் தேவையை எவ்வளவு பூர்த்தி செய்ய முடியும் என்பது தெரியவில்லை.

இந்த ஆண்டு தொடக்கத்தில், கொழும்பை தளமாகக் கொண்ட வணிகர்கள் தொற்றுநோய்க்கு முன்னர் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள 10 லட்சம் கிலோ மஞ்சளை விடுவிக்கக் கோரினர். அதன் மூலம், உள்ளூர் சந்தையில் அழுத்தத்தைக் குறைக்க முயன்றனர். உள்ளூர் மொத்த மற்றும் சில்லறை சந்தைகளில் இந்த சரக்கு விற்பனைக்கு இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவது இது முதல் முறை அல்ல. தொடர்ச்சியாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவதும் அவை போலீசாரால் பறிமுதல் செய்யப்படுவதும் நடந்து வருகிறது. இதற்கு காரணம், இலங்கையில், ஏற்பட்டுள்ள மஞ்சள் பற்றாக்குறை மற்றும் அதற்கு இலங்கையில் கிடைக்கும் அதிக விலையும் முக்கிய காரணமாக உள்ளது.