திங்கள், 28 டிசம்பர், 2020

பூஜ்ஜியம் கல்வி ஆண்டு என்றால் என்ன? தமிழகத்தில் அமல் ஆகுமா?

 Zero Academic Year:  தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பூஜ்ஜியம் கல்வி ஆண்டு அறிவிப்பது தொடர்பாக முதல்வருடன் கலந்து பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” பள்ளிகள் செயல்படாத நிலையில் இந்த ஆண்டை பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிப்பது தொடர்பாக முதலமைச்சருடன் பேசி முடிவு செய்யப்படும். முதல்வர்  சூழ்நிலைக்கேற்ப என்ன முடிவு செய்கிறாரோ அந்த முடிவைத்தான் பள்ளிக் கல்வித்துறை அமல்படுத்தும். ஆகவே, முதல்வரிடத்தில் கருத்துக்கள் பரிமாறியதற்குப் பிறகு தான், முடிவுகள் வெளிப்படையாக அறிவிக்க இயலும்” என்று தெரிவித்தார்.

பூஜ்யம் கல்வி ஆண்டு என்றால் என்ன?

பூஜ்ஜிய கல்வி ஆண்டு என்பது தேர்வுகள் மற்றும் வகுப்புகள் உட்பட எந்தவொரு கல்வி நடவடிக்கைகளும் நடத்தப்படாத ஆண்டாகும். அவ்வாறு அறிவிக்கப்பட்டால், இந்த கல்வியாண்டில் மாணவர்கள் எந்த கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்று பொருள் கொள்ளப்படும்.  மாணவர்கள் அடுத்த கல்வியாண்டிற்கு நேரடியாக தேர்ச்சிப் பெற்றவர்களாக அறிவிக்கப்படும்.


கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தமிழகத்தில் பள்ளிகள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை.

முன்னதாக, தமிழகத்தில் பள்ளிகள் (9, 10, 11, மற்றும் 12-ஆம் வகுப்புகள் மட்டும்), மற்றும் பள்ளி விடுதிகளையும், நவம்பர் 16ம் தேதி முதல் முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட தமிழக அரசு அனுமதியளித்தது. ஆனால், பள்ளிகளை திறப்பது சம்பந்தமாக பல ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்ததால், நவம்பர் 9ம் தேதியன்று அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகங்களிடம் தமிழக அரசு கருத்து கேட்டது. இதன் அடிப்படையில், 9, 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மற்றும், பள்ளி விடுதிகள் நவம்பர் 16ம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட உத்தரவு, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ரத்து செய்யப்படுகிறது. பள்ளிகள் திறப்பு தேதி சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு நவம்பர் 12ம் தேதி அறிவித்தது.

இதற்கிடையே, அரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வை நடத்த விரும்பினால் ஆட்சேபனை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

தனியார் பள்ளிகளில் ஏற்கனவே மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்து ஆன்லைன் வகுப்பை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.