திங்கள், 28 டிசம்பர், 2020

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயம்:

28/12/2020  Mayiladudurai as 38th District Tamil News : தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் இன்று (திங்கட்கிழமை) உதயமாகிறது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  சென்னையிலிருந்து காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.

கடந்த ஆண்டு வரை தமிழகத்தில் 32 மாவட்டங்களே இருந்து வந்த நிலையில், பொதுமக்கள் கோரிக்கை மற்றும் நிர்வாக வசதியை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு 6 புதிய மாவட்டங்களை உருவாக்கியது. அதில், 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தைப் பிரித்து, தென்காசி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. இதேபோல், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு என மொத்தம் 5 மாவட்டங்கள் புதிதாக உதயமானது.

பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட கலெக்டர்களும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து, மயிலாடுதுறை மாவட்டம் தனியே உருவாக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இது சம்பந்தமான அரசாணையும் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்வதற்கு,லலிதா ஐ.ஏ.எஸ்.  சிறப்பு அதிகாரியாகவும் ஸ்ரீநாதா ஐ.பி.எஸ். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறும் விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொளி வழியாக மயிலாடுதுறை புதிய மாவட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதற்கான விழா மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், சிறப்பு அதிகாரி லலிதா, எஸ்.பி.ஸ்ரீநாதா, எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

புதிதாகப் பிரிக்கப்பட்ட இந்த மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1172 சதுர கிலோமீட்டர். இதில் விவசாயம் 62,200 ஹெக்டர் பரப்பளவாக இருக்கும். இங்குள்ள மக்கள் தொகையின் எண்ணிக்கை, 9,18,356. பழையார், திருமுல்லைவாசல், பூம்புகார், தரங்கம்பாடி உள்ளிட்ட 26 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தின் பிரதானத் தொழிலாக விவசாயம் மற்றும் மீன் பிடி தொழிலும் உள்ளது. மேலும், ஏராளமான கோயில்களைக்கொண்டு ஆன்மீக மாவட்டமாகவும் கண்டறியப்படுகிறது. மேலும், இரண்டு டி.எஸ்.பி.களுக்கு கீழ் 14 காவல் நிலையங்கள், 2 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன.

தங்களின் பல ஆண்டு கனவு நிறைவேறியுள்ளதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.