திங்கள், 28 டிசம்பர், 2020

பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த 1,000 பேர் எங்கே? குழுக்கள் அமைத்து தேடும் பணியில் சுகாதாரத்துறை

 State government involved to find the 1000 people who returned from Britain : கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்ற சூழலில் அனைவரும் கொஞ்சம் ஆசுவாசப்பட்டோம். ஆனால் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற செய்தி மக்கள் பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. அதனால் இங்கிலாந்தில் கடுமையான ஊரடங்கு மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. விமான போக்குவரத்துகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, எல்லைகள் மூடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகள் குறித்த தகவல்களை சேகரித்து அவர்களை தனிமைப்படுத்தும் முயற்சிகளில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 25ம் தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரை தமிழகத்திற்கு பிரிட்டனில் இருந்து வந்த நபர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது சுகாதாரத்துறை. அந்த இடைப்பட்ட காலத்தில் 2300 நபர்கள் தமிழகம் வந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் இன்னும் கண்காணிப்பு வளையத்திற்குள் இன்னும் வரவில்லை என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க : ”கோ கொரோனா” சென்று, இப்போது ”நோ கொரோனா” – மத்திய அமைச்சரின் புது முழக்கம்

தடை அறிவிக்கப்பட்ட கடைசி இரண்டு நாட்களான 22 மற்றும் 23 தேதிகளில் பிரிட்டனில் இருந்து தமிழகத்திற்கு 49 பேர் பயணமாகியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் விமான நிலையத்திலேயே சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்பு வந்தவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல அவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறைத் துறையிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை 1362 நபர்கள் அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 1035 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சிலர் தாமாக முன் வந்து 104ல் தகவல் தெரிவித்துள்ளனர். ஒரு சிலரின் தொலைபேசி எண்கள் தவறாக உள்ளதால் அவர்களை தேடும் பணி சுகாதாரத்துறைக்கு சற்று சவாலான காரியமாக மாறியுள்ளது.