செவ்வாய், 22 டிசம்பர், 2020

இரட்டை இலக்கத்தை தாண்டாது

 ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவரும் தேர்தல் பிரசார வியூகம் அமைப்பதில் ஜாம்பவானுமான பிரசாந்த் கிஷோர், மேற்குவங்கத்தில் பாஜக இரட்டை இலக்கத்தை தாண்டினால் ட்விட்டரை விட்டே வெளியேறுகிறேன் என்று சவால் விடுத்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர் 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு பிரச்சாரம் வியூகம் வகுத்து தந்த இந்திய அளவில் கவனத்தைப் பெற்றார். பிறகு, டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் பிரச்சார வியூகம் அமைத்து பிரச்சாரம் செய்து வெற்றிக்கு உதவினார்.

இந்திய அளவில் இன்றைக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஏதோ ஒரு வகையில் பிரசாந்த் கிஷோரின் பிரசார வியூகத்தால் வெற்றி பெற உதவ முடியும் என்று நம்பத்தொடங்கிவிட்டனர். பிரசாந்த் கிஷோர் தனது ஐபேக் அமைப்பு மூலம் சமூக ஊடகங்கள் மற்றும் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்து தேர்தல் பிரச்சார வியூகம் வகுத்து செயல்படுத்துகிறார்.

சில மாதங்களுக்கு முன்புதான், பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து வெளியேறினார்.

தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், பிரசாந்த் கிஷோர் திமுகவுக்கு ஆதரவாக வியூகம் அமைத்து பிரச்சாரத்திற்கு உதவ ஒப்பந்தம் செய்துள்ளார்.

அதே நேரத்தில், தமிழகம் மட்டுமில்லாமல், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் 2021ம் ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அண்மையில், மேற்கு வங்கம் சென்ற பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பாதுகாப்பு வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, மத்திய அரசுக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்கம் சென்றபோது, அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் பாஜக 200 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறினார். அமித்ஷாவின் இந்த கருத்து தேசிய அளவில் கவனத்தைப் ஈர்த்தது.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சார வியூக ஜாம்பவான் பிரசாந்த் கிஷொர், மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தை தாண்டாது. அப்படி, பாஜக இரட்டை இலக்கத்தை தாண்டினால் நான் ட்விட்டரை விட்டே வெளியேறுகிறேன் என்று சவால் விட்டுள்ளார்.

இது குறித்து பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜக ஆதரவு ஊடகங்களின் ஒரு பகுதியினரால் பாஜக பற்றி எல்லாவற்றையும் மிகைப்படுத்தி ஊதிப் பெருக்குகின்றனர். உண்மையில் பாஜக மேற்கு வங்கத்தில் இரட்டை இலக்கங்களை தாண்டவே போராடும். தயவுசெய்து இந்த ட்வீட்டைச் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். பாஜக அதை தாண்டி ஏதேனும் சிறப்பாகச் செய்தால் நான் இந்த இடத்தை விட்டு வெளியேறுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தை தாண்டாது. அப்படி, பாஜக அப்படி ஏதாவது செய்தால் ட்விட்டரை விட்டே வெளியேறுகிறேன் என்று பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்திருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source: https://tamil.indianexpress.com/india/prashant-kishor-challenge-quite-from-twitter-if-bjp-crossed-double-digital-in-west-bengal-238164/