ஆயுர்வேத மருத்துவர்கள் இனி அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் மற்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளது.
ஆயுர்வேத மருத்துவர்கள் இனி அறுவை சிகிச்சை செய்வதற்கு வசதியாக இந்திய மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதலில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக ஆயுர்வேத மருத்துவம் படிப்பவர்களுக்கு முறையான பயிற்சியை அவர்களது பாடத் திட்டத்தில் சேர்க்கவும், அது ஆயுர்வேதம் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.
இந்த திருத்தத்தின்படி, பொதுவான அறுவை சிகிச்சை, பல், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்டவற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அனுமதி கிடைக்கும். இதற்காக இந்திய மருத்துவக் கவுன்சில் (ஆயுர்வேத முதுகலை படிப்பு) ஒழுங்குமுறை சட்டம் 2016-ல் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதுதொடர்பான அரசாணை நவம்பர் 19-ம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி ஆயுர்வேத மருத்துவப் படிப்பில் முதுகலை (ஷால்யா மற்றும் ஷாலக்யா) பயில்வோருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். இதற்கான பாடத் திட்டம் மற்றும் பயிற்சிகளை அளித்து தன்னிச்சையாக அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு அவர்களை தயார்படுத்த வேண்டும்.
ஆயுர்வேத முதுகலை பாடத் திட்டத்தில் 34 விதமான அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு பயிற்சி அளிக்கவும் அவை எந்த வகையான அறுவை சிகிச்சைகள் என்பதையும் மருத்துவக் கவுன்சில் பட்டியலிட்டுள்ளது. இது தவிர கண் சார்ந்து 9 விதமான அறுவை சிகிச்சைகளும், மூக்கு மற்றும் காது பகுதியில் தலா 3 விதமான அறுவை சிகிச்சைகளும், தொண்டை, பல் சிகிச்சையில் 2 வித அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆயுர்வேத மருத்துவர்கள் இனி அறுவை சிகிச்சை செய்யலாம் என்று வெளியான மத்திய அரசின் அறிவிப்புக்கு நவீன மருத்துவ அறிவியலான அலோபதி மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது நவீன மருத்துவத்தை அழிப்பதோடு நோயாளிகளின் உயிருடன் விளையாடும் ஆபத்தான செயல் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுர்வேத மருத்துவர்கள் இனி அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டாக்டர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பாஜக மத்தியில் ஆட்சிக்கு வரும் பொழுதெல்லாம் , மருத்துவத்தில் மூடநம்பிக்கைகளையும், அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களையும், திணிக்கிறது. காலாவதியான மருத்துவ முறைகளையும், போலி அறிவியலையும் ஊக்குவிக்கிறது. தற்பொழுதும் அது நடைபெறுகிறது.
இன்றைய நவீன அறிவியல் மருத்துவத்தை, ஆங்கில மருத்துவ முறை, மேற்கத்திய மருத்துவ முறை, கிறிஸ்தவ மருத்துவ முறை என்ற தவறான கருத்தை இந்துத்துவ சக்திகள் பரப்புகின்றன.
ஆங்கிலேய ஆட்சி முறை இந்தியாவில் ஏற்பட்டிருக்கா விட்டாலும், கருவிகளின் வளர்ச்சி, பல் துறை அறிவியல் முன்னேற்றம போன்றவற்றின் காரணமாக , இயல்பாகவே நவீன அறிவியல் மருத்துவம் இந்தியாவிலும் தோன்றியிருக்கும்.
அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
“ஆயுர்வேதா” என்பது இந்திய மருத்துவ முறை , “இந்து மருத்துவ முறை” என்ற கருத்தும் இந்துத்துவ சக்திகளிடம் உள்ளது.
ஆயுர்வேதா பண்டைய இந்திய மருத்துவ முறை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதை ‘இந்து மருத்துவ முறை’ எனக் கருதுவது தவறு.
அதை இந்து மருத்துவ முறையாக மாற்ற முயல்வது மதவெறி அரசியல் நோக்கம் கொண்டது.
பண்டைய இந்திய மருத்துவர்கள் பெரும்பாலும் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் கொண்டவர்களாக இருந்தனர். எனவே, அம் மருத்துவர்களுக்கும்,
மருத்துவ வளர்ச்சிக்கும் எதிராக பிராமணியம் செயல்பட்டது. மருத்துவ அறிவியல் வளர்ச்சியை தடுத்தது. மருத்துவர்களை இழிவு படுத்தி, சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்தது.
இந்நிலையில், ஆயுர்வேதாவை இந்துப் பண்பாட்டின் கூறாக மாற்றும் முயற்சிகள் பிராமணியத்தால் மேற்கொள்ளப் படுகின்றது.
‘ஒரே தேசம் ஒரே மருத்துவ முறை’ என்ற திட்டத்தை கொண்டுவர முயற்சிகள் நடைபெறுகின்றன. அந்தத் திசைவழியில், இதர பாரம்பரிய மருத்துவ முறைகளை புறக்கணிக்கும் போக்கும், நவீன அறிவியல் மருத்துவத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.
நவீன அறிவியல் மருத்துவம் என்ற புதிய கள்ளை, கலப்படம் செய்து ஆயுர்வேதா என்ற பழைய மொந்தையில் அடைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. நவீன அறிவியல் மருத்துவத்தை “திருதராஷ்டிர கட்டித் தழுவல் ” மூலம் அழித்திடும் முயற்சிகள் மேற்கொள்ளப்
படுகின்றன.
மருத்துவ அறிவியலில் இந்து வகைப்பட்ட ஆன்மீகத்தை கலக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. கடந்த காலத்தில் பிற மத பண்பாட்டுக் கூறுகளை இவ்வாறு உள்வாங்கியே பிராமணியம் அவற்றை அழித் தொழித்தது.
அதே வழி முறையில், ஆயுர்வேதா மருத்துவர்கள் நவீன மருத்துவ அறிவியலின் அறுவை சிகிச்சைகளை செய்ய அனுமதி வழங்கப் படுகிறது. மருத்துவத்தை சமஸ்கிருத மயமாக்கும் , இந்துத்துவ மயமாக்கும் போக்குகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவை இந்து நாடாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இவை திட்டமிட்டு செய்யப்படுகின்றன.
‘ஒருங்கிணைந்த மருத்துவ முறை’ (Integrated Medicine) என்ற பெயரில், யோகா மற்றும் ஆயுஷ் பாடத்திட்டங்கள் நவீன அறிவியல் மருத்துவத்தில் புகுத்தப் படுகிறது.
தேசியக் கல்விக் கொள்கை 2020,தேசிய நலக்கொள்கை 2017, தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019 போன்றவை இதற்கு துணை புரிகின்றன.
“மருத்துவ அறிவியல்” என்பது,ஒன்றே ஒன்றாகத் தான் இருக்க முடியும். அது “நவீன அறிவியல் மருத்துவம்” மட்டும் தான். இதர மருத்துவ முறைகளை மேம்படுத்தினால் அவையும் நவீன அறிவியல் மருத்துவமாக பரிணமிக்கும். பருப் பொருட்களை பற்றிய, அவற்றின் இயக்கம் பற்றிய அறிதல் அதிகரிக்க அதிகிக்க அது பல்வேறு அறிவியல்கள் ஒன்றாதலுக்கு இட்டுச் செல்லும்.
மார்க்ஸ் சொல்கிறார் “வருங்கால இயற்கை அறிவியல் மனிதன் குறித்த அறிவியலை உள்வாங்கிக்
கொள்ளும். அதே வழியில் மனிதன் குறித்த அறிவியல் இயற்கை அறிவியலை உள்வாங்கிக் கொள்ளும்.
அப்பொழுது ஒரே ஓர் அறிவியல் தானிருக்கும் ( பொருளாதார தத்துவவியல் கையெழுத்துப் பிரதிகள் – மார்க்ஸ்)
மருத்துவ அறிவியலில் பல்வேறு வகை அறிவியல்கள் இருப்பது போன்ற ஒரு தவறான கருத்தியல் தொடர்ந்து உருவாக்கப் படுகிறது. நிலை நாட்டப்படுகிறது.
இது அப்பட்டமான கருத்துமுதல்வாத, இயக்க மறுப்பியல் போக்காகும். இது அறிவியலுக்கும், அறிவுத் தோற்றவியல், வளர்ச்சி பற்றிய அறிவியலுக்கும் ( Epistomology) எதிரானது.
தேசிய இனம், மதம் போன்றவற்றின் அடிப்படையிலான அடையாள அரசியல்கள் மருத்துவ அறிவியலில் திணிக்கப் பட்டுள்ளதே இதற்குக் காரணம்.
வேறு எந்த அறிவியல் முறையும் இந்த அளவிற்கு தாக்குதல்களுக்கும், அடையாள அரசியலுக்கும் உள்ளாக்கப்படவில்லை.
மருத்துவ அறிவியலின் தோற்றம்,வளர்ச்சி, அதன் எதிர்காலம் குறித்த அறிவியல் பூர்வமான பார்வை, அணுகுமுறை இல்லாதது, இந்தத் தவறான புரிதலுக்கு காரணமாக அமைந்துள்ளது.
மருத்துவ அறிவியலின் சிக்கலான தன்மை, தனி மனிதர்களிடையே உள்ள உடற் கூறியல், உடலியங்கியல் ரீதியான வேறுபாடுகள், மரபியல் பண்புகள், இன்றைய நிலையில் குணப்படுத்த முடியாத பல்வேறு நோய்கள், நோயாளிகளின் விருப்பம் , உளவியல் காரணங்கள் இதற்கு கூடுதல் காரணங்களாக அமைந்துள்ளன.
பண்டைக் காலத்திலும் கூட உலகம் முழுவதும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்
பட்டுள்ளன. அவை மிகவும் தொடக்கக் கட்டதிலானவை. அதில் பிழைத்தவர்களை விட, பல்வேறு பாதிப்புகளுக் குள்ளாகி இறந்தவர்களே அதிகம்.
இருப்பினும், அந்த அனுபவங்களிலிருந்து தேவையானவற்றை ஏற்று, அறிவியல் ரீதியாக வளப்படு்த்தி, தொழில் நுட்ப ரீதியாக மேம்படுத்தியது தான், இன்றைய ‘நவீன அறிவியல் அறுவை சிகிச்சை முறைகளாகும்.
“நிலை மறுப்பின் நிலை மறுப்பு” என்ற இயக்கவிதியின் படி. பழையன கழித்து,புதியன புகுத்தப்பட்டுள்ளது.
நவீன அறிவியல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகள் திடீரென்று வானத்திலிருந்து குதித்ததல்ல!
அறிவியல் தொழில் நுட்பம் ரெடிமேடு சரக்கல்ல!
யாரோ சில நபர்களின் மூளையில் திடீரென ஊற்றெடுத்து வழிந்தோடியதல்ல!
அது மனித குலத்தின் செயல் முறையால் ஏற்பட்ட அனுபவம் மற்றும் அதன் மூலம் பெற்ற படிப்பினைகளின் ஊடாக வளர்ச்சிப் பெற்றதாகும்.
இன்றைய பல்துறை அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிகள்,நவீன கருவிகள் , மருந்துகள் போன்றவை அறுவை சிகிச்சை முறைகளை மிக உயர்ந்த பட்ச நிலைக்கு உயர்த்தியுள்ளன.
இன்றைய அறுவை சிகிச்சை முறைகளை வேண்டாம் என புறக்கணித்துவிட்டு, யாரும் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய அறுவை சிகிச்சை முறைதான் வேண்டும் எனக் கூற மாட்டார்கள்.
அக்கால அறுவை சிகிச்சை முறைகளின் வலியையும்,வேதனைகளையும், கொடுமைகளையும், பாதிப்புகளையும் யாரும் பொறுத்துக் கொள்ள முடியாது. அவற்றை நினைத்தாலே உள்ளம் நடுங்கும். அன்றைய வளர்ச்சி நிலை அவ்வளவுதான். அதற்காக அக்கால மருத்துவர்களை குறை சொல்ல முடியாது. அவர்களால் அன்றைய நிலையில் முடிந்தது அவ்வளவுதான். அன்றைய அறுவை சிகிச்சை முறைகள் தான் சிறந்தது என இப்போது யாரும் கொண்டாட முடியாது.
இன்னிலையில், எதற்காக “ஆயுர்வேத முதுநிலை அறுவை சிகிச்சை” என்ற ஒரு படிப்பை உருவாக்க வேண்டும்? அதில் ஏராளமானோரை படிக்க வைக்க வேண்டும். பின்னர் , அதன் போதாமையால் , ஏன் நவீன அறிவியல் அறுவை சிகிச்சையில் அவர்களை பயிற்றுவிக்க வேண்டும்? இவை தேவையற்ற குழப்பங்களையே உருவாக்கும்.
மக்களை பாதிக்கும்.
பல்வேறு மருத்துவ முறைகள் இருக்கின்றன என்று கூறிக் கொண்டே, இந்த காலாவதியான, அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால் வழக்கொழிந்த முறைகளை, வலுக்கட்டாயமாக பிடித்துக் கொண்டு தொங்குவது சரியல்ல.
பழமைவாதமும், அடையாள அரசியலுமே இதற்குக் காரணம். மருத்துவ அறிவியலில் உரம் போட்டு வளர்க்கப் பட்டிருக்கும், மதம், இனம், தேசம் போன்றவற்றின் அடிப்படையிலான அடையாள அரசியல், மனித உழைப்பு சக்தியை விரயமாக்குகிறது. மூடநம்பிக்கைகளை புகுத்துகிறது. தவறான நம்பிக்கைகளை ஊக்கப்படுத்துகிறது. மருத்துவத்தில் கருத்து முதல்வாதத்தை திணிக்கிறது. பொருள்முதல்வாதம் தாக்குதலுக்குள்ளாகிறது. இயங்கியல் (Dialectics) அணுகுமுறை நிராகரிக்கப் படுகிறது. இயங்காவியல் (Metaphysical) அணுகுமுறை வளர்க்கப்படுகிறது. மருத்துவ அறிவியலல் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால் மறுப்புக்கு உள்ளான (Negated) மருத்துவ முறைகளை , நடைமுறையில் நிரூபணமான நவீன அறிவியல் மருத்துவத்துடன் ஒன்றிணைக்க ‘நிதி அயோக்’ முயல்வது சரியல்ல .
“ஒரே தேசம்,ஒரே மருத்துவ முறை” என்ற போர்வையில் , 2030 ஆம் ஆண்டுக்குள் ஒருங்கிணைந்த ,
ஒரே மருத்துவ முறையை கொண்டுவர அது திட்டமிட்டுள்ளது.
இம்முயற்சி…
# மருத்துவத் தரத்தை பாதிக்கும்.
# நமது நவீன அறிவியல் மருத்துவ முறையின் மீதான நம்பிக்கையை உலக நாடுகள் மத்தியில் சீர்குலைக்கும்.
# மருத்துவ அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்குத் தடையாகும்.
ஒரே மருத்துவம் என்ற பெயரில், ஆயுர்வேதா மருத்துவத்தில் முதுநிலை அறுவை சிகிச்சை என்ற படிப்பை உருவாக்கி ,ஒரே அறுவை சிகிச்சை நிபுணர், பல் ,கண் ,காது மூக்குத் தொண்டை அறுவை சிகிச்சைகளை செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது சரியானதல்ல.
ஆயுர்வேதா மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை மேற்கொண்டாலும், நவீன அறிவியல் மருத்துவத்தின் மயக்க சிகிச்சையைத்தான் பயன்படுத்தியாக வேண்டும்.
இன்றைய நவீன மயக்க மருத்துவ முறையை ஆயுர்வேதா மருத்துவ முறை எனக் கூறமுடியாது.
இந்துவா பழமைவாத சக்திகள் முன் வைக்கும், ஒரே மருத்துவம் என்பது பிற்போக்கானது.
மருத்துவ வளர்ச்சிக்கு எதிரானது. பிராமணிய பண்பாட்டு மேலாதிக்க நோக்கம் கொண்டது. அது முறியடிக்கப்பட வேண்டும்.
அதற்கு மாற்றாக, அறிவியல் தொழில் நுட்ப அடிப்படையிலான மதச்சார்பற்ற மருத்தவமுறை பாதுகாக்கப்பட வேண்டும். வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
எனவே,
# எதிர் காலத்தில், இந்தியாவில் அடிப்படை மருத்துவப் படிப்பு எம்பிபிஎஸ் ஆக மட்டுமே இருக்க வேண்டும்.
# ஆயுஷ் மருந்துவ முறைகளில் உள்ள பயன்தரத்தக்க , ஏற்கத்தக்க மருந்துகளை இன்றைய ,நவீன அறிவியல் தொழில் நுட்பம் கொண்டு ஆராயவும், மூலக்கூறுகளை பிரித்தெடுக்கவும், எம்பிபிஎஸ் படிப்பு முடித்த பின் , ஆயுஷ் முதுநிலை மருத்துவப் படிப்பு மற்றும் பிஎச்டி , படிப்புகளை உருவாக்க வேண்டும்.
# ஆயுஷ் மருந்துகள் குறித்த ஆய்வுகளுக்கு, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
# இந்தியா முழுவதும் உள்ள ,அனைத்து ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளையும், நவீன அறிவியல் மருத்துவக் கல்லூரிகளாக மாற்ற வேண்டும்.
# புதிதாக ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கக் கூடாது.
# ஏற்கனவே, ஆயுஷ் மருத்துவப் படிப்பை முடித்தவர்களை இணைப்புப் படிப்புகள் மூலம் நவீன அறிவியல் மருத்துவர்களாக மாற்ற வேண்டும்.
இன்றையத் தேவை, பண்டைய மருத்துவ
முறைகளின் மருந்துகளில் உள்ள மூலக்கூறுகளில் பயன்படத் தக்கவற்றை ,அறிவியல் தொழில் நுட்ப ரீதியாக (Improving through current science and technology) பிரித்தெடுத்து மேம்படுத்தி நவீன அறிவியல் மருத்துவத்தில் பயன்படுத்துவது தான்.
அப்படியே ஒருங்கிணைத்தல் ( Integrate ) அல்ல.
நிரூபணமான மருத்துவ அறிவியலையும் , நிரூபணமாகாத மருத்துவ அறவியலையும் ஒருங்கிணைப்பது, மருத்துவ அறிவியலையே சீர்குலைத்து விடும்.
எனவே, மருத்துவ அறிவியலையும், அதன் மதச்சார்பற்ற தன்மையையும், வளர்ச்சியையும் பாதுகாப்பது , அறிவியலின் பால் அக்கறை கொண்ட அனைவரது கடமையாகும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.