ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரு நகரில், குழந்தைகள் உட்பட குறைந்தது 227 பேர், நோய்வாய்ப்பட்டுள்ளனர். நீர் மாசுபடு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஆனால், என்செபாலிடிஸ் போன்ற வைரஸ் தொற்று வாய்ப்புகள் நிராகரிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
ஏலூரு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மோகன் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம், ” ஏலூரு மருத்துவமனைகளில் நோய்வாய்ப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றிரவு முதல் இன்று காலை வரை சுமார் 140 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். குமட்டல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படுகிறது. திடீர் அதிகரிப்புக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.” என்று தெரிவித்தார்.
நோய்க்கான காரணத்தை கண்டறிய, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.முத்யலா ராஜு தெரிவித்தார்.
ஏலூரு நகரில் அசோக் நகர், அருந்ததிபேட்டை பகுதிகளில் உள்ள நான்கு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அதிகமாக நோய்வாய்ப்பட்டுள்ளனர். அங்கு, 10 நாட்களுக்கு முன்பு குடிநீர் மாசுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூர் மருத்துவர்களுக்கு உதவவும், நோய்க்கான காரணம் குறித்து விசாரிக்கவும் விஜயவாடாவிலிருந்து மருத்துவக் குழு விரைந்து வந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ஏ. காளி கிருஷ்ணா சீனிவாஸ் தெரிவித்தார்.
“குறிப்பாக குழந்தைகள், கண் எரிச்சல் போன்ற அறிகுறிகளுக்குப் பின் வாந்தியெடுக்கத் தொடங்கினர். அவர்களில் சிலருக்கு மயக்கமும், வலிப்பும் ஏற்பட்டது. சனிக்கிழமையன்று, ஆபத்தான நிலையில் தான் சில குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். ஆனால், இப்போது அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர், ”என்று அரசு மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி ஒருவர் கூறினார்,
நீர் மாசுபடுவதை சரிபார்க்க சுகாதார அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக கணக்கெடுப்பு தொடங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜு தெரிவித்தார்.
இதற்கிடையே, குடிநீர் ஆதாரங்களை பாதுகாக்கும் பணிகளில் அரசு கடமை தவறிவிட்டதாக தெலுங்கு தேசம் கட்சி விமர்சித்துள்ளது. “இது ஆந்திர அரசின் அக்கறையின்மை. கடந்த 18 மாதங்களாக குடிநீர் ஆதாரங்கள் சுத்தம் செய்யப்படவில்லை, இதன் காரணமாக 150 க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். ஏலூரு, மாநில சுகாதார அமைச்சக தொகுதிக்குள் வருகிறது. இது, ஜெகன் மோகன் ரெட்டி அரசின் செயல்படாத தன்மை ”என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.