கொரோனா நோய் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வந்து பல்வேறு நாடுகளில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 85 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்ட வருகிறது. மருத்துவ சோதனைகள் விரைவாக செயல்படவும், நோய் கண்டறிந்து முடிவுகளை விரைந்து அறிவிக்கும் வகையில் செப்டம்பர் மாதம் 8ம் தேதி அன்று 2000 மினி க்ளினிக்குகள் தமிழகம் முழுவதும் திறக்கப்படும் என்று கூறியிருந்தார் எடப்பாடி பழனிசாமி.
இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று ராயபுரம், வியாசர்பாடி, மற்றும் மயிலாப்பூர் ஆகிய இடங்களில் மினி க்ளினிக்குகளை முதல்வர் திறந்து வைக்கிறார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 200 மினி க்ளினிக்குகள் அமைய உள்ளது. முதற்கட்டமாக 47 இடங்களில் மினி க்ளினிக்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் 20 இடங்களில் இன்று முதல் மினி க்ளினிகுகள் செயல்பட உள்ளது. நாளை மறுநாள் (16/12/2020) சேலத்தில் அமைய இருக்கும் 40 மினி க்ளினிக் சேவைகளையும் முதல்வர் திறந்து வைக்க உள்ளார். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அந்ததந்த பகுதிகளை சேர்ந்த அமைச்சர்கள் துவங்கி வைக்க உள்ளனர்.
தற்போது தமிழகத்தில் மொத்தமாக 1852 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அதே போன்று ஒவ்வொரு 8 கி.மீ தொலைவிற்கும் ஒரு அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மினி க்ளினிக்குகள் துவங்கப்பட்ட பிறகு ஒவ்வொரு 3 கி.மீ தொலைவிற்கும் மருத்துவ வசதி தமிழகத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த க்ளினிக்குகள் காலை 8 முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். கிராமப்புறங்களில் இரவு 7 மணி வரை பொதுமக்கள் இந்த மருத்துவ சேவையை பெற்றுக் கொள்ளலாம்.