103kg gold worth Rs 45cr goes ‘missing’ from CBI custody in Tamil Nadu : 2012ம் ஆண்டு மெட்டல்ஸ் அண்ட் மினரல்ஸ் ட்ரேடிங் கார்ப்பரேசன் (MMTC) மற்றும் சுரானா கார்ப்பரேசன் (தங்கம் இறக்குமதி செய்யும் நிறுவனம்) நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக தங்கம் இறக்குமதி செய்யப்படுவதாக சந்தேகத்தின் பெயரில் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தியது. எம்.எம்.டி.சி. அதிகாரிகள் சுரானா நிறுவனத்திற்கு உடந்தையாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் 2012ம் ஆண்டு என்.எஸ்.சி. போஸ் சாலையில் அமைந்திருக்கும் அந்நிறுவனத்தை சோதனைக்கு உட்படுத்தியது சி.பி.ஐ.
அந்த நிறுவனத்திடம் இருந்து 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு அந்த நிறுவனத்தின் லாக்கரில் சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்த லாக்கரின் 72 சாவிகளும், 400.47 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆவணத்தை தாக்கல் செய்தது சி.பி.ஐ. 2012ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கிற்கும் பெறப்பட்ட தங்கத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சி.பி.ஐ அப்போது முடிவு செய்த நிலையில் 2013ம் ஆண்டு அப்படி தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது வெளிநாடு வர்த்தக கொள்கைகளுக்கு எதிரானது என்று வழக்கு பதிவு செய்து பெறப்பட்ட தங்கத்தை 2013ம் ஆண்டு வழக்கிற்கு மாற்றியது.
இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 2015ம் ஆண்டு இந்த தங்கத்தை வெளிநாடு வர்த்தக பொது இயக்குநகரத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டது. ஆவணங்கள் மட்டுமே அங்கு தரப்பட்டது ஒழிய தங்கம் அனுப்பி வைக்கப்படவில்லை. இதற்கிடையில் சுரானா நிறுவனம் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி இருப்பதால் தங்கத்தை திருப்பி தருமாறு கேட்டுக் கொண்டது. எஸ்.பி.ஐ வங்கியும் சுரானாவும் சிறப்பு நீதிமன்றத்தில் தங்கத்தை திருப்பித் தரும்படி கேட்டுக் கொண்டன. இதனை தொடர்ந்து அவர்களுக்கு தங்கத்தை திருப்பி தருமாறு டிசம்பர் 12, 2017 அன்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த தங்கம் தங்கள் துறைக்கு கிடைக்க வேண்டும் என்று மத்திய வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது. டிசம்பர் 27, 2019 அன்று சிறப்பு நீதிமன்றம், தங்கத்தை சிறப்பு அதிகாரியான சி. ராமசுப்ரமணியத்திடம் (Liquidator) அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
சுரானா நிறுவனத்தின் லாக்கர்களில் இருந்த தங்கத்தை எடை பார்த்தபோது 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 103.864 கிலோ தங்கத்தைக் காணவில்லை. இதையடுத்து, 103.864 கிலோ தங்கத்தை ஒப்படைக்கக் கோரி சிறப்பு அதிகாரியான ராமசுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம் இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. மெட்ரோ விங்கில் புகார் அளிக்கும்படி சிறப்பு அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து வாதாடிய சி.பி.ஐ தரப்பு “இவ்வாறு செய்தால் சி.பி.ஐ. மீது மக்களுக்கு இருக்கும் மதிப்பிற்கு களங்கம் வந்துவிடும்” என்று கூறியது. இதனை நிராகரித்த நீதிபதி பி.என். பிரகாஷ் அனைத்து காவல்த்துறை பிரிவினரையும் நம்ப வேண்டும் என்று கூறி, எஸ்.பி. தகுதிக்கு குறையாத அதிகாரியைக் கொண்டு விசாரித்து ஆறு மாதங்களில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.சி.ஐ.டிக்கு உத்தரவிட்டார்.