செவ்வாய், 15 டிசம்பர், 2020

சர்ச்சைக்குள்ளானா: மக்களவையில் இரண்டு முறை மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது

 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும் பாஜக எம்.பி-யுமான பிரக்யா சிங் தாக்கூர், “சூத்திரரர்கள் சமூக அமைப்பு மற்றும் அறியாமை காரணமாக அவர்களை சூத்திரர்கள் என்று அழைக்கும்போது சூத்திரர்கள் மோசமாக உணர்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும் பாஜகவின் போபால் தொகுதி எம்.பி-யுமான பிரக்யா சிங் தாக்கூர் சனிக்கிழமை மத்தியப் பிரதேசத்தில் சேஹோரில் நடந்த ஒரு கூட்டத்தில், “சமூக அமைப்பு குறித்த அறியாமை காரணமாக சூத்திரர்களை சூத்திரர்கள் என்று அழைக்கப்படும் போது அவர்கள் மோசமாக உணர்கிறார்கள்.” என்று கூறினார்.

சத்ரிய மகாசபா கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தாக்கூர், “நம்முடைய தர்மசாஸ்திரத்தில் சமுதாயம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.” என்று கூறினார்.

“நீங்கள் ஒரு சத்திரியரை சத்திரியர் என்று அழைத்தால் அவர்கள் மோசமாக உணர்வதில்லை. ஒரு பிராமணரை பிராமணர் என்று அழைத்தால் அவர்கள் மோசமாக உணர்வதில்லை. ஒரு வைசியரை வைசியர் என்று அழைத்தால் அவர்கள் மோசாக உணர்வதில்லை. ஆனால், நீங்கள் ஒரு சூத்திரரை சூத்திரர் என்று அழைத்தால் அவர்கள் மோசமாக உணர்கிறார்கள். இது ஏன்? அறியாமை காரணமாக அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.” என்று கூறினார்.

பிற சர்ச்சைக்குரிய கருத்துக்களாக தாக்கூர் கூறுகையில், “மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் சட்டம் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்காக இருக்க வேண்டும் … அது தேசத்திற்காக வாழ்பவர்களுக்கு பொருந்தாது” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “ஏழைகளுக்கு பயனளிக்கும் வகையில் பொருளாதார பின்னணியின் அடிப்படையில் இடஒதுக்கீடு இருக்க வேண்டும். அது சாதி அடிப்படையில் அல்லாமல் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ அவர்களுக்கு உதவுகிறது” என்றும் அவர் கூறினார். கூட்டத்தில் பெண்களிடம் உரையாற்றிய அவர், “இன்றைய சத்திரியர்கள் தங்கள் கடமைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஆயுதப் படைகளில் சேர்க்க அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை உருவாக்க வேண்டும். அதனால், அவர்கள் தேசத்துக்காக போராடி நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த முடியும்.” என்றார்.

தற்போது நடந்து வரும் விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து அவர் கூறுகையில், “விவசாயிகள் என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேசவிரோதிகள். அவர்கள் விவசாயிகள் அல்ல, ஆனால் காங்கிரஸ்காரர்களும் இடதுசாரிகளும் விவசாயிகளின் உடையில் இருந்துகொண்டு நாட்டிற்கு எதிராக குரல் எழுப்புகிறார்கள். தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள், ஷாஹீன் பாக் போராட்டத்தின் போது (CAA க்கு எதிராக டெல்லியில்) அவர்கள் செய்த அதே வழியில் செய்கிறார்கள்.” என்றார்.

தாகூர் ஞாயிற்றுக்கிழமை கருத்து கேட்பதற்கு கிடைக்கவில்லை. ஆனால், சத்ரிய மகாசபா நிருவப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த நிகழ்வின் பின்னணியில் அந்த அமைப்பு இல்லை என்று அகில பாரதிய சத்ரிய மகாசபாவின் தேசிய செயல் தலைவர் சுரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

“நிறுவன நாள் டிசம்பர் 27ம் தேதி நினைவுகூரப்படும். அதற்காக குவாலியரில் ஒரு கூட்டம் நடைபெறும்” என்று தோமர் கூறினார். இந்த அமைப்பு நாடு முழுவதும் 17.5 லட்சம் உறுப்பினர்களையும் மத்திய பிரதேசத்தில் சுமார் 2.5 லட்சம் உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத மகாசபா அலுவலக பொறுப்பாளர்கள், தாக்கூர் கலந்து கொண்ட நிகழ்ச்சி தனது மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என்று கூறினார்கள்.

தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக தாக்கூர் சமீப காலங்களில் இரண்டு முறை மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது. 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, 26/11 தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் மகாராஷ்டிரா ஏடிஎஸ் தலைவர் ஹேமந்த் கர்கரே மரணம் குறித்து அவர் கூறியதற்கு மன்னிப்பு கேட்டார். கர்கரே தலைமையிலான ஏடிஎஸ் விசாரணைக்குப் பின்னர் குண்டுவெடிப்பு நடந்த ஒரு மாதத்திற்குள், அக்டோபர் 23, 2008 அன்று மாலேகான் வழக்கில் தாகூர் முதன்முதலில் கைது செய்யப்பட்டார்.

நவம்பர், 2019ல் மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவைப் பாராட்டியதற்காக அவர் சர்ச்சைக்குள்ளானார். இது அவரை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்குமாறு பாஜகவைக் கட்டாயப்படுத்தியது. கோபமடைந்த எதிர்க்கட்சி அவருடைய முதல் மன்னிப்பை நிராகரித்ததையடுத்து அவர் மக்களவையில் இரண்டு முறை மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது.

source https://tamil.indianexpress.com/india/pragya-singh-thakur-speech-why-shudras-feel-bad-when-they-are-called-shudras-237107/