மத்திய அரசின் மூன்று வேளாண் திருத்த சட்டங்களை ரத்து திரும்ப பெறக் கோரி குடியரசுத் தலைவரிடம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் கேட்டுக் கொண்டனர்
விவசாய சட்டங்களை திரும்ப பெற கோரி காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி 2 கோடி பேரிடம் கையெழுத்து பெற்றது. அதனை இன்று குடியரசு தலைவரிடம் காங்கிரஸ் கட்சி வழங்கியது.
குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி,” சட்டங்கள் திரும்ப பெறும் வரை விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்பதை பிரதமரிடம் சொல்ல விரும்புகிறேன். பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வை கூட்டி வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். நாடு முழுவதும் 2 கோடி பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளோம். பிரதமர் விவசாயிகளின் குரல்களை கேட்க வேண்டும் ” என்று தெரிவித்தார்.
மேலும், ” டெல்லியில் விவாசாயிகளின் போராட்டம் நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. ஒட்டுமொத்த நாடே இதை உற்றுப் பார்த்துக் கொண்டு வருகிறது. டெல்லியில் நிலவும் கடுமையான குளிர்ச்சியில் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். பலர் மரணம் அடைந்திருக்கின்றனர். விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியாவில் யாராலும் எடுக்க முடியாது என்று எச்சரித்து கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் ஜனாதிபதியை சந்திக்க புறப்பட்ட , பிரியங்கா காந்தி , கே. சி. வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
“இந்தியா ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். இந்தியாவில் ஜனநாயகம் வெறும் கற்பனை அளவில் தான் உள்ளது. நடைமுறையில் இல்லை,” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
இதற்கிடையே, போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பது ஒரு அரசின் தார்மீக கடமை என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
“மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். இந்திய மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு. கோரிக்கைகள் திறந்த மனதுடன் கேட்கும் போதுதான் உடன்பாடு கொண்டு வர முடியும், ”என்று அவர் கூறினார்.
டெல்லி காவல்துறையின் நடவடிக்கையை உரிமை மீறல் என்று வேணுகோபால் தெரிவித்தார். பிராதன எதிர்க்கட்சி என்ற முறையில் குரல் கொடுக்க அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
வேளாண் சட்டத் திருத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என கடந்த செப்டமபர் மாதத்தில் குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் முறையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.