ஆட்கொணர்வு மனு என்றால் என்ன !(ஹேபியஸ் கார்பஸ்)
ஒரு தனிமனிதன் தவறாக கைது செய்யப்பட்டு, சுதந்திரமற்று இருக்கும்போது, ஆட்கொணர்வு மனு மூலம் கோரினால், அந்த நபரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிப்பது அவசியம்.
தனிமனித சுதந்திரம் என்பது அனைவரும் விரும்பும் ஒரு நிலை மட்டுமல்ல... அது அனைவராலும் மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. தனிமனித சுதந்திரம் சட்டத்தாலோ, வேறு ஏதாவது ஒரு காரணத்தினாலோ மீறப்படும் நேரங்களில் பாதிக்கப்பட்டவருக்கு உறுதுணையாக இருப்பது Habeas Corpus என்ற ஆட்கொணர்வு நீதி பேராணை. ஆட்கொணர்வு மனு என்று சொல்லப்படுகிற இந்த நீதிப் பேராணை, ஒரு நாட்டின் சட்டத்தில் அங்கமாக இடம்பெறவில்லை என்றால், அது தனிமனித உரிமையை ஒட்டுமொத்தமாக தகர்த்து எரிந்துவிடும்!
இந்திய அரசியல் அமைப்பு சாசனம் தனிமனித உரிமையை பெரிதும் போற்றுகிறது. அரசியல் அமைப்பு சாசனம் ஷரத்து 226ன் கீழ், ஏனைய ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது போலவே, ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்படுகிறது. தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படும்போது, அதை நிவர்த்தி செய்து, பாதுகாப்பதில், ஆட்கொணர்வு நீதிப் பேராணை பெரும்பங்கு வகிக்கிறது.
பெரும்பாலான நாடுகளில் தனிமனித சுதந்திரம் பெரிதும் மதிக்கப்படுகிறது. ஒரு தனிமனிதனின் சுதந்திரம் தடை செய்யப்படும் போது, சட்டப்படி, நீதிமன்றம் மூலம் அந்தத் தடை பற்றி விசாரித்து தக்க தீர்வு கோர உரிமை உள்ளது. சட்டத்துக்குப் புறம்பான ஒரு சுதந்திரத் தடை என்பது, இன்று உலக அளவில் மனித உரிமை மீறல் செயலாகவே பார்க்கப்படுகிறது. கனடா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி என்று தனிமனித உரிமையை போற்றும் நாடுகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இந்த ஆட்கொணர்வு நீதிப் பேராணை மனித சுதந்திரத்தை காக்கும் ஒரு மந்திரக் கோல். இங்கிலாந்தில் தோன்றிய இந்த நீதிப் பேராணை, அந்நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்து இன்று ‘காமன்வெல்த்’ என்று சொல்லப்படுகின்ற ஏனைய நாடுகளிலும் ஏனைய பல நாடுகளிலும் பின்பற்றப்பட்டு, தனிமனித உரிமைக்கு ஒரு சட்டப் பாதுகாப்பு அளிக்கிறது.
ஒரு தனிமனிதன் தவறாக கைது செய்யப்பட்டு, சுதந்திரமற்று இருக்கும்போது, ஆட்கொணர்வு மனு மூலம் கோரினால், அந்த நபரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிப்பது அவசியம். அந்த சுதந்திரத் தடை சட்டத்துக்குப் புறம்பாக இருப்பின், அவர் விடுவிக்கப்படலாம். தகுந்த காரணமோ, ஆதாரமோ இல்லாமல் நீண்ட நாட்கள் சிறையில் வாடும் விசாரணைக் கைதிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். அப்பாவிகளும் தவறு செய்யாதவர்களும் விசாரணைக் கைதியாக பல நாட்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும்போது, ஆட்கொணர்வு மனு நீதிப் பேராணை அவர்களுக்கு பெரிதும் கைகொடுக்கும். இம்மனு எவருடைய விடுதலையை கோரி தாக்கல் செய்யப்படுகிறதோ, அவரின் நடத்தையைப் பற்றி பரிசீலனை செய்யத் தேவையில்லை. நம் அரசியல் சாசனம் நீதிமன்றங்களுக்கு இந்த நீதி பேராணை வழங்குவதற்கு ஒரு விரிவான அதிகார வரம்பையே தந்துள்ளது.
பெண்கள் இன்று ஓரளவு சுதந்திரம் பெற்ற நிலையில், தான் விரும்பிய துணையை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி தான் மனம் விரும்பியவருடன் வாழ்வை அமைத்துக்கொள்ள செல்லும் நிலையில், அவருடைய பெற்றோரால் பல வித தடைகள் செய்யப்படு கின்றன. இவ்வாறு ஓர் இளம்பெண்ணும் ஆணும் தங்களுடைய சுய விருப்பத்துக்காகச் செயல்படும் நிலையில், நம் நாட்டில் குடும்ப கவுரவம், அந்தஸ்து, சாதி, மதம் என்ற பெயரால் பல இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதும் நிதர்சனமே.
‘திருமண வயதை ஒட்டிய பெண் காணவில்லை’ என்றால், முதல் எண்ணமாகவே, அவள் தன் விருப்பப்பட்ட நபருடன் சென்றிருப்பாள் என்று இந்த சமுதாயம் நினைக்கிறது. ஒரு பெண் காணவில்லை என்றால், காவல் நிலையத்தில் புகார் மனு தாக்கல் செய்த பிறகும் அவளின் இருப்பிடத்தைப் பற்றி எந்தவிதத் தகவலும் பெற இயலாத நிலையில், பெற்றோர் நீதிமன்றம் நாடி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யக் கூடிய நிலை இருக்கிறது.
இவ்வாறு தாக்கல் செய்யும் மனுக்களில், காவல் துறையினரால் நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்படும் அந்தப் பெண், பெரும்பாலாலும் பெற்றோருக்கும் தான் விரும்பி சென்ற ஆண்மகனுக்கும் இடையிலே பந்தாடப்படுகிற நிலையினை பார்க்கிறோம். இவ்வாறான நேரங்களில் தன் விருப்பப்படி ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கக்கூடிய பெண், 18 வயது பூர்த்தியடைந்து, ‘மேஜர்’ என்ற நிலையில் இருக்கும்போது, நீதிமன்றம் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கு கண்டிப்பாக மதிப்பளிக்கும். அந்தப் பெண் 18 வயது பூர்த்தியாகாமல் இருக்கும் பட்சத்தில், அவளுடைய காப்பாளருக்கே (பெரும்பாலும் பெற்றோர்) தீர்மானிக்கும் உரிமை கொடுக்கப்படுகிறது. அந்த மைனர் பெண் பெற்றோருடனோ, காப்பாளருடனோ போக சம்மதிக்காத பட்சத்தில், அவர் 18 வயது பூர்த்தியாகும்வரை அரசு காப்பகங்களில் பராமரிக்கப் படுவது நடைமுறை.
தன் விருப்பப்படி திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதி, சட்டப்படி ஏற்றுக்கொள்ளக்கூடிய திருமணம் என்ற நிலையிலும் கூட, பெற்றோரின் கட்டாயத்தில் அந்தப் பெண், கட்டிய கணவனை விடுத்து பெற்றோருடன் செல்லக்கூடிய நிலை ஏற்படுவதையும் காண்கிறோம். பல வழக்குகளில் நீதிமன்றத்தில் இந்த இருவேறு நிலைகளை மாறி மாறிப் பார்க்கும்போது, பெண்என்பவள் தனிமனித சுதந்திரம் அற்று, பெற்றோருக்கும் கட்டிய கணவனுக்கும் இடையே உரிமை கோரப்படுவது வேதனை அளிக்கக்கூடிய ஒரு விஷயமாகவே தோன்றுகிறது.
சில வழக்குகளில் குழந்தைகளின் பெற்றோர் அல்லது உரிமை கோருவோர் என்று இரு தரப்பினருக்கு இடையிலான போராட்டத்தில் ஒருவரின் பாதுகாப்பிலிருந்து சட்டத்துக்குப் புறம்பாக குழந்தை எடுத்துச் செல்லப்படும்போது தாக்கல் செய்யப்படும் ஆட்கொணர்வு நீதி பேராணையில்,பெற்றோரின் அல்லது காப்பாளரின் உரிமையைக் காட்டிலும் பாதிக்கப்பட்ட குழந்தையின் நலனே சட்டத்தின் முன் பார்க்கப்படும். குழந்தை காப்பாளர் உரிமை கோர Guardians and Wards Act போன்ற சிறப்புச் சட்டத்தின் கீழ் ஆணை கோருவதே சிறப்பு.
எந்த ஒரு நிலையிலும் தனிமனித சுதந்திரம் தடைபடக் கூடாது என்றும் தனி மனித சுதந்திரத்தை போற்றிப் பாதுகாப்பது ஒரு ஜனநாயக நாட்டின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகவும் ஆட்கொணர்வு நீதிப் பேராணை வலியுறுத்துகிறது. ஒரு தனிநபர் சட்டத்தின் முன் தண்டனைக்குரிய குற்றவாளியாக இருக்கும் நிலை தவிர, வேறு எந்த நிலையிலும் அவரது தனிமனித சுதந்திரம் மீறப்படக்கூடாது. இந்த நீதிப் பேராணை ‘ஒருவரின் சுதந்திரத் தடை சரிதானா’ என்பதைக் கண்டறிய பேருதவியாக இருக்கிறது. சட்டத்துக்குப் புறம்பான தனிமனித சுதந்திரத் தடை மனித உரிமை மீறலே!
ஒரு தனிநபர் சட்டத்தின் முன் தண்டனைக்குரிய குற்றவாளியாக இருக்கும் நிலை தவிர, வேறு எந்த நிலையிலும் அவரது தனிமனித சுதந்திரம் மீறப்படக்கூடாது.
நன்றி : குங்குமம் தோழி, 15 Oct 2014எழுத்துவடிவம்: சாஹா