வியாழன், 10 டிசம்பர், 2020

கொரோனா நோயாளிகள் வீட்டில் இனி நோட்டீஸ் ஒட்டத் தேவையில்லை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

 கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் வீட்டில் அதிகாரிகளின் வழிகாட்டுதல்கள் இல்லாமல் இனி சுவரொட்டிகள் மற்றும் நோட்டீஸ் ஒட்டத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் வீடுகளுக்கு வெளியே, அவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் குறிப்பிட ரிய அதிகாரியின் வழிகாட்டுதல் இல்லாவிட்டால் சுவரொட்டிகள் மற்றும் அடையாளங்களை ஒட்டுவது இனி தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட விஷயங்களில் சுவரொட்டிகளை அதிகாரிகள் ஒட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீடுகளுக்கு வெளியே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்ற சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநில அரசாங்கங்களுக்கு எதிரான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரணை செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர் சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, இந்த நடவடிக்கையை மத்திய அரசு பரிந்துரைக்கவில்லை என்றாலும், நோயாளிகளுடன் மற்றவர்கள் கவனக்குறைவாக தொடர்பு கொள்வதைத் தடுப்பதற்கு சில மாநில அரசுகள் தாங்களாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

“மத்திய அரசு, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மூலம் ஏற்கனவே அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள் / முதன்மை செயலாளர்கள் / சுகாதாரத்துறை செயலாளர்கள் ஆகியோருடன் தொடர்பு கொண்டது. கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளில் சுவரொட்டிகள் அல்லது பிற அடையாளங்களை ஒட்டுவது தொடர்பான எந்த அறிவுறுத்தல்களும் வழிகாட்டுதலும் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் இல்லை” என்று மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் அளித்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் சுவரொட்டிகள் மற்றும் நோட்டீஸ் ஒட்டுவதால் அந்த வீட்டில் குடியிருப்பவர்கள் மற்றவர்களால் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்படுவார்கள் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்தது.

இதுபோன்ற சுவரொட்டிகள், நோட்டீஸ்களை ஒட்டும் நடைமுறையைத் தவிர்ப்பதற்காக வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்று கோரி குஷ் கல்ரா என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். இதையடுத்து, இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது. “கோவிட் -19 நோயாளிகளின் அடையாளங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டு, சமூக ஊடகக் குழுக்களில் பரப்பப்படுவதால் அவர்களுக்கு களங்கம் ஏற்படுவதோடு தேவையற்ற கவனத்தை ஈர்க்க வழிவகுக்கிறது என்று அவர் வாதிட்டார். இதனால், இந்த மக்கள் பரிசோதனை செய்ய வேண்டாம் என்று தாங்களாகவே விலகிக்கொள்கின்றனர்” என்று மனுதாரர் தெரிவித்திருந்தார்.