புதன், 9 டிசம்பர், 2020

இனி தப்பவே முடியாது: ஆன்லைனில் சிறார் போர்னோகிராபி கண்டறிய இன்டர்போல் சாஃப்ட்வேர்

 குழந்தைகள் தொடர்புடைய ஆபாச படங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதை கண்டறிய உதவும்  மென்பொருள் ஒன்றை மகாராஷ்டிரா காவல்துறையின் சைபர் பிரிவு சமீபத்தில் இன்டர்போல் அமைப்பிடம் இருந்து வாங்கியது.  இந்த மென்பொருள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை இங்கே பார்ப்போம்:

மென்பொருள் பற்றி?

டிஜிட்டல் படங்களில் நிர்வாணத்தைக் கண்டறிதல், முக அமைப்பின் மூலம் ஒருவரின் வயதை தீர்மானித்தல் போன்ற பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தும் மென்பொருளை இன்டர்போல் தயாரித்தது. குழந்தைகள் ஆபாச படங்கள் தொடர்பான முக்கிய திறவுச்சொல்லை  அல்காரிதம் (படிமுறைத் தீர்வு) துணைகொண்டு  ஆராய்வதன் மூலம், குற்றவாளிகளை சட்ட அமலாக்க அமைப்புகள் அடையாளம் காண்கிறது. தேடல்  வடிப்பான்கள் (கீவேர்ட்ஸ்) அடிப்படையில், மென்பொருள் ‘கிராலர்’ வலைத்தளங்களில் உள்ள படங்கள், வீடியோக்கள் மற்றும் எழுத்தக்களை ஸ்கேன் செய்கிறது. குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் கண்டறியப்பட்டதும், அது உடனடியாக தரவுத்தளத்தில் சேர்க்கப்படும். தரவுகள் உடனடியாக சேகரிக்கப்படுவதால் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கண்டறிவது எளிதாக அமைகிறது.

இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் செயல்படுகிறது?

தரவுத்தளத்தை  இன்டர்போல் நிர்வகித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்துக்கு  இன்டர்போல் அமைப்பு சமீபத்தில் இந்த மென்பொருளை வழங்கியது. ஆண்டின் தொடக்கத்தில், மென்பொருள் செயல்பாடுகள் குறித்து  12  மகாராஷ்டிரா  குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு  இன்டர்போல் பயிற்சி அளித்தது. கேரளாவில் குழந்தைகள் ஆபாச படங்கள் அதிகமாக பதிவேற்றப்படுவதைத் தொடர்ந்து, கேரளாவும் கடந்த ஆண்டு இன்டர்போல் பயிற்சியை நாடியது.

2019 முதல் இந்தியாவில் சிஎஸ்ஏஎம்-க்கு எதிரான நடவடிக்கை ஏன் அதிகரித்தது?

2019 ஆம் ஆண்டில் இருந்து, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கான (சிஎஸ்ஏஎம்) எதிரான இந்தியாவின் போராட்டம்  வலுபெறத் தொடங்கியது.  காணாமல் போன மற்றும் சுயநலத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட குழந்தைகள் பற்றிய தகவல்களை அணுகுவது குறித்து இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.  இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவின் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) மற்றும் அமெரிக்காவின் ”காணாமல் போன சுயநலத்திற்காக பயனப்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையத்திற்கு” இடையே கையெழுத்தானது.

குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசக் காட்சிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் முறைகேடுகள் பற்றிய ஆதாரங்கள் குறித்த தகவல் பரிமாற்றத்திற்கு புதிய முறைமையை அமைப்பதற்கு வழி வகுப்பதோடு, குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் உதவியது.

என்.சி.ஆர்.பி  சிறுவர் பாலியல் முறைகேடுகள் தொடர்பான தகவல்களை, அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பியது. நாடு முழுவதும் 2019, செப்டம்பர் முதல் 2020 ஜனவரி வரை 25,000 சிறுவர் ஆபாசப் படங்கள்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பதிவேற்றம் செய்யும் மாநிலங்களில் டெல்லி மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலகள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன.

மகாராஷ்டிராவில் மேற்கொள்ளப்படும் ‘ஆபரேஷன் பிளாக்ஃபேஸ்’ என்றால் என்ன?

என்.சி.ஆர்.பி ஆதாரக் குறிப்பை,  மகாராஷ்டிரா சைபர் குற்றப்பிரிவு போலீசார் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் வசிக்கும் மாவட்டங்கக்கு அனுப்பத் தொடங்கினர். நடப்பு ஆண்டில் மட்டும், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்  தொடர்புடைய வழக்குகளில் 100 க்கும் மேற்பட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 50 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு, ‘ஆபரேஷன் பிளாக்ஃபேஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.