காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கடிதம் எழுதிய, 23 அதிருப்தி தலைவர்கள், கட்சித் தலைவர் சோனியா காந்தியை நாளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
வட மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி தொடர் தோல்வியை சந்தித்தது. இதனால் கட்சி பெரும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், கட்சியில் சீர்திருத்தம் வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியாகாந்திக்கு கடிதம் எழுதியது இந்தியன் எக்ஸ்பிரஸில் ஆகஸ்ட் 23 அன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக கோவா சென்ற காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, டெல்லி திரும்பியதை தொடர்ந்து, கட்சியின் சீர்திருத்தங்கள் குறித்து கடிதம் எழுதிய 23 மூத்த தலைவர்களை நாளை சந்திக்கிறார். இந்த கூட்டத்தில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆனந்த் சர்மா, கபில் சிபல், மணீஷ் திவாரி மற்றும் சஷி தரூர்; மற்றும் ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர்கள், பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் பிருத்விராஜ் சவான் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த தலைவர்களான மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ஏ கே ஆண்டனி மற்றும் ஏஐசிசி பொதுச் செயலாளர் (அமைப்பு) கே சி வேணுகோபால் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்த்திற்கு மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் ஏற்பாடு செய்துள்ளார். இது குறித்து ஆலோசனை செய்ய, இந்த மாத தொடக்கத்தில் பதினைந்து நாட்களுக்குப் பிறகு கோவாவிலிருந்து திரும்பிய சோனியாகாந்தியை கமல்நாத் இரண்டு முறை சந்தித்துள்ளார்.
இந்த கூட்டத்தில், கட்சியின் நிர்வாகம் குறித்து தீர்ப்பதற்கும், கட்சியை முன்னோக்கி செல்வது குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது காங்கிரஸ் கட்சியின் இடைகால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வரும் நிலையில், கட்சியின் நிரந்தர தலைவர் பதவிக்கான தேர்தலை அடுத்த சில மாதங்களில் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இதில் முன்னாள் தலைவர் ராகுல் மீண்டும் தலைவர் பதவி ஏற்க ஒப்புக் கொண்டாரா என்பது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில், கடிதம் எழுதிய 23 மூத்த தலைவர்கள் கட்சியின் மறுமலர்ச்சி மற்றும் நிறுவன தலைமை குறித்து மாற்றம் வேண்டும் என கோரியதை தொடர்ந்து, கட்சியில் பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.