பெரம்பலூர் அருகே பட்டியல் இன சிறுவர்களை மலம் அள்ளச் சொல்லி துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் மலம் கழிபதற்காக அந்த கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்திற்கு சென்றனர். அப்போது அங்கு வந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அபினேஷ், செல்வக்குமார், சிலம்பரசன் ஆகிய 3 பேரும் சிறுவர்களை மலத்தை அள்ளச் சொல்லி துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுவர்கள் மலத்தை சாக்குப் பையில் அள்ளி அப்புறப்படுத்தியிருகிறார்கள்.
இதனிடையே அப்பகுதிக்கு வந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள், அந்த இளைஞர்களைக் கண்டித்ததுடன் சிறுவர்கள் மலத்தை சாக்குப் பையில் அள்ளுவதை புகைப்படம் எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அந்த கிராமத்து மக்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், பட்டியல் இன சிறுவர்களை மலம் அள்ளச் சொல்லி துண்புறுத்திய இளைஞர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகெயன் புகாரைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
சிறுவர்களை மலம் அள்ளச் சொல்லி துன்புறுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் பெரிய அளவில் நடத்தப்படும் என்று பொதுமக்களும் விசிகவினரும் தெரிவித்தனர். இதனால், போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.