வியாழன், 31 டிசம்பர், 2020

டாப் ரேங்க்’ மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது ஏன் கவலை அளிக்கிறது?

 1996-2015 ஆண்டுக்கு இடையே சி. பி. எஸ்.இ மற்றும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் நடத்திய 10, 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வில் முதலிடம் பெற்ற பெரும்பாலான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று மேற்படிப்பை தொடர்ந்ததை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கடந்த வாரங்களில் பட்டியலிட்டுக் காட்டியது.

 

 

வெளிநாட்டில் வசிப்பவர்களில் நான்கில் மூன்று பங்கினர், அதவாது 34 பேர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அமெரிக்கா இலக்கு நாடாக இருந்தாலும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், சீனா, கனடா, பங்களாதேஷ், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இதர மாணவர்கள் வசித்து வருகின்றனர்.

“முதலிடம் பிடித்த மாணவர்கள் அயல் நாட்டிற்கு  இடம்பெயர்வது  மூலம் பிரச்சனை மிக ஆழமாக, விரிவாக பரவிவிட்டது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் ” என சஞ்சயா பாரு (பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் ஊடக ஆலோசகர்) தனது கட்டுரையில் தெரிவித்தார் . “2015க்குப் பிந்தைய நாட்களில், இந்தியாவில் திறமையான, மேல் தட்டு பிரிவை சேர்ந்த மாணவர்கள் புலம்பெயர்வது அதிகரித்ததாக சமீபத்திய தரவுகள் தெரிவிப்பதாகவும்  ஆசிரியர் தனது  கட்டுரையில் தெரிவித்தார்.

புது டெல்லியில் செயல்படும் இரண்டு தனியார் உயர்நிலைப் பள்ளிகளிடமிருந்து சேகரித்த தரவுகள் மூலம், ” 2000ஆம்  ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 20 சதவீத மாணவர்கள் மட்டுமே மேற்படிப்புக்காக அயல் நாடுகளுக்கு சென்றிருந்த நிலையில், 2010ம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை 50 சதவீதமாகவும், 2019ம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை  70 சதவீதமாக உயர்ந்தாகவும் சஞ்சயா பாரு தனது கட்டுரையில் சுட்டிக்காட்டினார்”.

சிபிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வுகளில் முதலிடத்தைப் பெற்ற மாணவர்கள்  இந்தியாவின் பிரகாசமான எதிர்காலமாகிய மாணவர்கள் என்றால், தனியார் பள்ளிகளில் இருந்து அயல் நாடுகளுக்கு செல்பவர்கள் இந்தியாவின் செல்வந்தர்களாக உள்ளனர் என்றும் குறிப்பிடுகின்றார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ” ஆத்ம நிர்பார் (சுய-சார்பு இந்தியா) பாரதத்திற்கான பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பு  ஒருபுறம் இருக்க, இந்தியாவின் சிறந்த மற்றும் பிரகாசமான மாணவர்கள்  மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்வதில் மும்முரமாக உள்ளனர்.”

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு மாணவர்கள் செல்வது இயல்பாகவே  பாதிப்பை ஏற்படுத்தாது போன்ற கூற்றுகளை முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரதமர் மோடி இருவரும் எடுத்துரைத்தாலும், வெளிநாடுகளில் குடியேறிய அதிக எண்ணிக்கையிலான  இந்தியர்கள் (என்.ஆர்.ஐ) தாய் நாட்டிற்கு திரும்புவதை  தவிர்த்து வருகின்றனர். மேலும் தங்கள் சொந்த நாட்டை விட தங்கள் குடியேறிய நாடுகளுக்கு அதிக பங்களிப்பை வழங்கி வருவதையும் தரவுகள் சுட்டிக் காட்டுகிறது.

உண்மையில், பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் அநேக இந்தியர்கள் இந்தியாவை விட்டு வெளியே செல்லவே விரும்புகின்றனர். தாய்நாடு தங்களை  இனியும் விரும்பவில்லை என்று உணர்வு அவர்களிடத்தில் அதிகம் காணப்படுகிறது.  குறிப்பாக, சிறுபான்மை பிரிவு மாணவர்களிடம் காணப்படும் அந்நியப்படுதல் உணர்வு ஒரு குழப்பமான போக்கை காட்டுகிறது என்று ஆசிரியர்  தனது கட்டுரையில் தெரிவித்தார்.

“வெளிநாடுகளில் வாழ்வதற்கும் வெளிநாட்டிலிருந்து வேலை செய்வதற்கும் தெரிவுசெய்த இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒரு கவலையான போக்கு” என்று அவர் எழுதுகிறார்.

ஒரு நிதியாண்டில் இந்தியாவிலுள்ள தனிநபர் குடியிருப்பாளர்கள் அந்நியச் செலவானியாக 2,50,000 அமெரிக்க டாலர் வரை பெறலாம் என சட்டம் சொல்கிறது. இந்தியாவில் வசிக்காத ஒருவர் இந்தியாவில் முதலீடு செய்ய சட்டம் அனுமதிக்கிறது.

“அடுத்த தலைமுறை மேல்தட்டு மக்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டே, இந்தியாவில் வணிகத்தை  நிர்வகிக்கும் இந்த இரட்டை நிலை வாழ்க்கையைத் தான் அதிகளவில் தேர்வு செய்வார்கள்,” என்று ஆசிரியர் தனது கட்டுரையை முடிக்கிறார்.