வியாழன், 17 டிசம்பர், 2020

வளைகுடா நாடுகளின் இந்தியர்களுக்கு தபால் வாக்கு ஏன் மறுக்கப்படுகிறது?

 NRIs Postal-voting-rights:  வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தேர்தலில் தபால் வாக்குப்பதிவு செய்யும் நடைமுறை தொடர்பாக கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம்   வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் சில யோசனைகள் முன்வைத்துள்ளது.

முன்மொழியப்பட்ட திட்டத்தின் கீழ், அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் வசிக்கும் இந்திய வாக்காளர்களுக்கு முதலில் தபால் வாக்குப்பதிவு திட்டத்தை முதலில் செயல்படுத்தப்படலாம் என்று தேர்தல் ஆணையம் சுட்டிக் காட்டியது.

இப்போதைக்கு, முன்மொழியப்பட்ட தபால் வாக்குப்பதிவு திட்டத்தில் வளைகுடா நாடுகள் சேர்க்கப்படவில்லை.

என்ன காரணம்?

குவைத், ஓமான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற வளைகுடா பகுதியில் தொடர்ந்து தங்கிப் பணிபுரியும்  அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு எதிராக  செயல்பட  வேண்டும் என்ற உந்துதல் தேர்தல் ஆணையத்திற்கு இருப்பதாக வெளிப்படையாகத் தெரியவில்லை. எவ்வாறாயினும், கடந்த காலங்களில் வளைகுடா மன்னராட்சி  நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் நடைமுறையை  எளிதாக்குவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் சில வலுவான கருத்தை வெளிப்படுத்தியது.

மன்னராட்சி நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது  ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு அந்நாட்டின் அனுமதி தேவைப்படும். பொதுவாக, இத்தகைய நடவடிக்கைகளுக்கு வளைகுடா நாடுகள் ஒப்புதல் அளிக்காது.

இதன் காரணமாக, முன்மொழியப்பட்ட திட்டத்தில் வளைகுடா நாடுகளை சேர்ந்த வாக்காளர்களை தேர்தல் ஆணையம்,  சேர்க்கவில்லை.

என்.ஆர்.ஐ வாக்காளர்களின் தற்போதைய பலம் என்ன?

2015 ஆம் ஆண்டு ஐ.நா. அறிக்கையின்படி, வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் எண்ணிக்கை 16 மில்லியன் ஆகும்.  உலகின் மிகப் பெரிய விரிந்து பரவிய புலம்பெயர் இனம் இந்தியர்களாகும்.

இருப்பினும், வாக்காளர் பட்டியலில் பதிவு செய்த வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அதாவது, 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே இந்தியாவில் தங்களை  வாக்காளர்களாக பதிவுசெய்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், அயல்நாடுகளில் இருந்து சுமார் 25,000 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க இந்தியா திரும்பினர்.

என்.ஆர்.ஐ வாக்காளர்?

எந்தெந்த நாடுகளில் எத்தனை என்.ஆர்.ஐ வாக்காளர்கள் குறித்த தகவல்கள் எதையும் இந்திய தேர்தல் ஆணையத்தில் நிர்வகிக்க வில்லை. மாறாக, மாநிலம் வாரியாக என்.ஆர்.ஐ வாக்காளர்கள் குறித்த தரவை ஆணையம் வைத்திருக்கிறது.

எனவே, வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவுசெய்து கொண்ட மாநிலங்களின் விவரங்கள் தேர்தல் ஆணையம் வைத்திருக்கிறது. ஆனால் அவர்கள் வசிக்கும் அந்தந்த நாடுகளைப் பற்றிய குறிப்பு எவையும் தேர்தல் ஆணையத்திடம் இல்லை .

1.18 லட்சம் என்.ஆர்.ஐ வாக்காளர்களில், சுமார் 89,000 பேர் கேரளா வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துள்ளனர். இரண்டாவதாக ஆந்திரா வாக்காளர் பட்டியலில்  பதிவு செய்துள்ளனர்  (தோராயமாக 7,500). மகாராஷ்டிரா (தோராயமாக- 5,500), கர்நாடகா (தோராயமாக- 4,500), தமிழ்நாடு (3,200), தெலுங்கானா (2,500) போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், தபால் வாக்குப்பதிவு செய்யும் நடைமுறை தொடர்பாக தேர்தல் ஆணையம் யோசித்து வருவதால், நாடு வாரியாக வாக்காளர் பட்டியலை நிர்வகிக்க  வேண்டும்.

தபால் வாக்குப்பதிவு எவ்வாறு செயல்படும்?

கடந்த வாரம் வெளியுறவுத் துறை அமைச்சகம் உடனான சந்திப்பில், “தேர்தல் அறிவிப்பு வெளியான ஐந்து நாட்களுக்குள் தேர்தல் அதிகாரியிடம் (ஆர்.ஓ) தபால் வாக்குப்பதிவைப் பயன்படுத்தும் தனது விரும்பத்தை வெளிநாடு வாழ் இந்தியர்கள்  தெரிவிக்க வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ளது. அத்தகைய தகவல்களைப் பெற்றதும், ​தேர்தல் அதிகாரி வாக்குச் சீட்டை மின்னணு முறையில் அனுப்பி வைப்பார்.

இந்திய தூதரகத்தில் நியமிக்கப்பட்ட அதிகாரி, வாக்காளர் சார்பாக வாக்குச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து வாக்காளரிடம் ஒப்படைப்பார். என். ஆர். ஐ    வாக்காளர் பின்னர் தனது விருப்பான வாக்கை பதிவு செய்து, வாக்குச் சீட்டையும்  சுய அறிவிப்புப் படிவத்தையும் தூதரக அதிகாரியிடம் ஒப்படைப்பார்.  இந்த, வாக்குச் சீட்டையும்,சுய அறிவிப்புப் படிவத்தையும் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகம் அனுப்பி வைக்கும்.