20/12/2020 பிரிட்டனிலிருந்து தமிழ்நாடு திரும்பிய ஒருவருக்கு உருமாறிய புதிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதாக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 17 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், அவ்வப்பொழுது கைகளை சுத்தமாகக் கழுவுதல் ஆகியவை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” உருமாறிய புதிய வைரஸ் பாதிப்பு சென்னையில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டது. கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார்” என்று தெரிவித்தார்.
கடந்த நம்பர் 25 முதல் டிசம்பர் 23-ஆம் தேதி நள்ளிரவு வரை சுமார் 33,000 பயணிகள் இங்கிலாந்திலிருந்து பல்வேறு விமான நிலையங்கள் வாயிலாக இந்தியா வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, இது வரை 114 பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களது மாதிரிகள் கொல்கத்தா, புவனேஸ்வர், ஐதராபாத், பெங்களூரு மற்றும் தில்லியில் உள்ள 10 இந்திய சார்ஸ்-கோவிட் – 2 மரபணு வரைபட கூட்டமைப்பின் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதனை அடுத்து இங்கிலாந்திலிருந்து வந்த ஆறு பயணிகளிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. பெங்களூர் ஆய்வகத்தில் மூன்று மாதிரிகள், ஐதராபாத் ஆய்வகத்தில் 2 மாதிரிகள், புனே ஆய்வகத்தில் ( தமிழகத்தை சேர்ந்தவர்) 1 மாதிரியில் உருமாறிய கொரோனா வைரஸின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு முன்னதாக தெரிவித்தது.