திங்கள், 28 டிசம்பர், 2020

பிரதமரின் மான்கிபாத் உரையின்போது பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்பிய விவசாயிகள்

 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் போராடிவரும் விவசாயிகள், இன்று பிரதமர் மோடியின் மான்கி பாத் நிகழ்ச்சியிபோது, அவரது உரையைப் புறக்கணிக்கும் வகையில் பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் சர்ச்சைக்குரிய புதிய வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தலைநகரில் தொடர்ந்து தீவிரமடைந்து வருவகிறது. டெல்லியின் சிங்கு மற்றும் காசிப்பூர் எல்லைகளில் உள்ள விவசாயிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர ‘மான் கி பாத்’ வானொலி உரையின் போது பாத்திரங்களை அடித்து சத்தம் எழுப்பினார்கள்.

டெல்லியின் எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை காலை, பெரிய அளவில் ஊர்வலமாக அணிவகுத்துச் சென்றனர். விவசாயிகள், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக பாத்திரங்களை அடித்து ஒலி எழுப்பி முழக்கமிட்டனர்.

இந்த வார தொடக்கத்தில், டிசம்பர் 27ம் தேதி பிரதமர் மோடியின் வானொலி நிகழ்ச்சி உரையை பாத்திரங்களை அடித்து ஒலி எழுப்பி புறக்கணிக்கும் போராட்டத்தில் தங்களுடன் இணையுமாறு பல விவசாயிகள் சங்கத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதேபோல, கொரோனா வைரஸ் பொது முடக்கத்தின் ஆரம்ப நாட்களில் பாத்திரங்களை அடித்து ஒலி எழுப்புமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிக்கும்போது, விவசாயிகள் தலைவர் ஜெக்ஜீத் சிங் தலேவாலா, டிசம்பர் 25 முதல் 27ம் தேதி வரை ஹரியானாவில் உள்ள நெடுஞ்சாலைகளில் சுங்கவரி வசூல் நிறுத்தப்படும் என்று கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் அனைவரும் உண்ணாவிரதம் இருக்க மக்களை கேட்டுக்கொண்டார்.

“டிசம்பர் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஹரியானாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் கட்டணத்தை வசூலிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நாங்கள் தடுப்போம். டிசம்பர் 27ம் தேதி நம்முடைய பிரதமர் மான்கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுவதாக தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸுக்காக நாட்டு மக்கள் பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பிரதமரின் அதே வழியில், அவர் மான்கி பாத்தில் உரையாற்றும்போது மக்கள் பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்புமாறு நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்” என்று பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) தலைவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சனிக்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கங்கள் மீண்டும் மத்திய அரசுடன் உரையாடலைத் தொடங்க முடிவு செய்து டிசம்பர் 29ம் தேதி அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கான தேதியை முன்மொழிந்துள்ளதாக விவசாயிகள் தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்தார்.

இதுவரை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்கெனவே 5 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. ஆனால், கேள்விக்குரிய 3 சட்டங்களை மொத்தமாக ரத்து செய்வதை விட வேறு எதையும் விவசாயிகள் ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை தொடர்கிறது. இந்த சட்டங்கள் மண்டிகள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை முறைகளை பலவீனப்படுத்துவதன் மூலம் பெரு நிறுவனங்களின் தயவில் இருக்க வேண்டி இருக்கும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

source: https://tamil.indianexpress.com/india/farmers-beat-utensils-during-pm-modis-mann-ki-baat-speech-239336/