பாஜக தேசியத் தலைவர் ஜே பி நாடாவுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு பொறுப்பான 3 ஐபிஎஸ் அதிகாரிகளை உள்துறை அமைச்சகம் புது டெல்லிக்கு அழைத்துள்ளது. அவர்களை அனுப்ப மேற்கு வங்க மாநில அரசு மறுப்பு தெரிவித்துள்ளதால் மத்திய அரசுக்கும் மேற்கு வங்க மாநில அரசுக்கும் இடையே புதிய மோதல் புள்ளி உருவாகியுள்ளது.
கொல்கத்தா புறநகரில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வியாழக்கிழமை ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்களை வீசினார்கள். இதையடுத்து, மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பான கூட்டத்தில் டெல்லியில் திங்கள்கிழமை அந்த அதிகாரிகளை ஆஜராகுமாறு மத்திய உள்துறை அமைச்சக தலைமைச் செயலாளர் மற்றும் அம்மாநில டிஜிபிக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், வெள்ளிக்கிழமை மாநில அரசு உள்துறை அமைச்சகத்தின் அழைப்புக்கு அவர்களை அனுப்ப மறுத்துவிட்டது.
மேற்கு வங்க மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பிக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய தகவல்தொடர்புகளில், உள்துறை அமைச்சகம் ஐ.ஜி (தெற்கு வங்காள பிரிவு) ராஜீவ் மிஸ்ரா, டி.ஐ.ஜி (பிரசிடென்சி பிரிவு) பிரவீன் திரிபாதி, மற்றும் வடக்கு 24 பர்கானா மாவட்ட எஸ்.பி. போலாநாத் பாண்டே ஆகியோர் மத்திய அரசுக்கு அறிக்கை அளிப்பதற்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாய் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுக்கு எழுதினார். அதில், மாநில அரசு இப்பிரச்னையை ஏற்கெனவே தீவிரமாக அணுகி வருகிறது என்பதால், சட்டம் ஒழுங்கு தொடர்பான கூட்டத்தில் கலந்துகொள்வதில் இருந்து விலக்கு கேட்டுக்கொண்டுள்ளதாக வட்டாரங்கள் கூறுகின்றன.
அந்த 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளைப் பற்றிய மத்திய அரசின் கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக, மேற்கு வங்கம் இந்த அதிகாரிகளை விட்டுவிட முடியாது. அவர்கள் டெல்லிக்கு அனுப்பப்படமாட்டார்கள் என்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிகிறது.
“ஏற்கனவே நாங்கள் மாநிலத்தில் குறைந்த எண்ணிக்கையிலான ஐ.பி.எஸ் அதிகாரிகளே உள்ளனர். எனவே அவர்களின் கோரிக்கையை பின்பற்றி அந்த அதிகாரிகளை விடுவிக்க முடியாது என்று நாங்கள் பதில் எழுதினோம்” என்று மேற்கு வங்க உள்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் மூத்த எம்.பி கல்யாண் பானர்ஜி மத்திய அரசு பழிவாங்குவதாக குற்றம் சாட்டினார். “நேற்று மாலை உள்துறை அமைச்சகம் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசுடன் இணைக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு ஒரு கடிதம் எழுதியது. உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசின் பழிவாங்கும் தன்மை தெளிவாக உள்ளது. சட்டம் ஒழுங்கு என்பது ஒரு மாநில அரசின் விவகாரம். அன்றைய தினம் அவர்கள் நடத்திய கூட்டத்துக்கு பாஜக ஒருபோதும் அனுமதி பெறவில்லை. இது குறித்து நான் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன்” என்று மம்தா பானர்ஜி கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி. பேராசிரியர் சௌகதா ரே, “மத்திய பணிகளுக்கு மத்திய அரசு அதிகாரிகளின் பெயர்களைக் கேட்கலாம். ஆனால் ஐ.பி.எஸ் அல்லது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மத்திய அரசுக்கு அனுப்புவதை அனுமதிக்கலாமா வேண்டாமா என்பதை மாநில அரசுதான் தீர்மானிக்க வேண்டும். வேறு வழியில்லை. பணிகள் காலியாக இருக்கும்போது இது நடக்கிறது.” என்று கூறினார்.
சாதாரண சூழ்நிலைகளில், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநில அரசின் ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு அனுப்பப்படுகிறார்கள். எந்தவொரு ஐபிஎஸ் அதிகாரியையும் மத்தியப் பணிக்கு அழைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு.
1954ம் ஆண்டு ஐபிஎஸ் கேடர் விதிகள் 6வது விதியின் கீழ், இந்திய அரசாங்கத்துடன் ஒரு அதிகாரி நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், மத்திய அரசின் விருப்பமே மேலோங்கி நிற்கிறது.
ஆபத்தில் கூட்டாட்சி கொள்கை; நீதிமன்றம் வழிகாட்டலாம்
ஒரு அதிகாரியை மத்திய அரசுப் பணிக்கு அழைக்க மத்திய அரசுக்கு உரிமை உண்டு. கருத்து வேறுபாடு ஏற்பட்டால், மத்திய அரசின் முடிவே மேலோங்கும். இருப்பினும், கூட்டாட்சி கட்டமைப்பைப் பொறுத்தவரை, மத்திய அரசு பொதுவாக வலியுறுத்தவில்லை. இந்த விஷயம் நீதிமன்றத்தில் முடிவடையும்.
இருப்பினும், நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை மனதில் கொண்டு, மத்திய அரசு இந்த உத்தரவை அரிதாகவே பயன்படுத்துகிறது. பொதுவாக, மத்திய அரசுப் பணிகளுக்காக அதிகாரிகளின் பட்டியலைக் கேட்டு ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதுகிறது. அதிகாரிகளின் விருப்பத்தின் அடிப்படையில் (மாநிலத்துடன் பிணைக்கப்படவில்லை), மாநில அரசுகள் மத்திய பணிகளுக்கு ஒரு “சலுகை பட்டியலை” அனுப்புகின்றன. சலுகை பட்டியலில் எந்த அதிகாரி எங்கே பணியமர்த்தப்படுவார் என்பதை இந்திய அரசு முடிவு செய்கிறது. இந்த ஆண்டு 2021ஆம் ஆண்டிற்கான சலுகைப் பட்டியலுக்காக டிசம்பர் 7ம் தேதி மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது.
அண்மை காலங்களில் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல்கள் நடந்த சம்பவங்கள் உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்பு மாநில கேடர் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரத்தை மத்திப் பணிக்கு அழைத்தது தொடர்பாக தமிழகத்துக்கும் மத்திய அரசுக்கும் மோதல் ஏற்பட்டது. 2014ம் ஆண்டில், ஐக்கிய முற்போக்கு அரசாங்கம் அரசாங்கம் ராமசுந்தரத்தை மத்தியப் பணிக்கு மத்திய அரசு அழைத்திருந்தது. அங்கே அவர் சிபிஐயில் ஏ.டி.ஜி-யாக சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 3 மாதங்களாக மாநில அரசு அவரை விடுவிக்காததால், அவர் தனியாக மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தார். விடுவிக்கப்படாமல் அவர் மத்தியப் பணிக்கு சென்றதற்காக மாநில அரசு அவரை இடைநீக்கம் செய்தது.
இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது. ராமசுந்தரம் தனது மத்தியப் பணியைத் தக்க வைத்துக் கொண்டார். ஆனால், சிபிஐயில் பணியாற்றும் வாய்ப்பை இழந்தார். அவர் இறுதியாக சாஷஸ்திர சீமா பால் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் துணை ராணுவப் படைக்குத் தலைமை தாங்கிய முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
குஜராத் கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி குல்தீப் சர்மாவும் இதேபோல் 2012ல் மத்தியப் பணிக்கு சென்றார்.
இருப்பினும், இந்த சந்தர்ப்பங்களில், அதிகாரிகள் மத்தியில் பணியாற்றத் தயாராக இருந்தனர். சலுகை பட்டியலில் இடம் பெற்றனர். ஆனால், இப்போது மேற்கு வங்கத்தில் அப்படி இல்லை.
இந்த விவகாரம் நீதிமன்றங்களுக்கு செல்லக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. “மாநிலத்தின் அனுமதியின்றிகூட அதிகாரிகளை இந்திய அரசு பணிக்கு அழைக்க மத்திய அரசுக்கு உரிமை உண்டு. மத்திய அரசின் முடிவு தவறான நம்பிக்கையில் மேற்கொள்ளப்படுகிறது. அல்லது மாநிலத்திற்கு எதிரான சார்பு மூலம் தெரிவிக்கப்படுகிறது என்று நீதிமன்றத்தில் வாதிடலாம்” என்று ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரி கூறினார்.