ஞாயிறு, 13 டிசம்பர், 2020

1500 வண்டிகளில் தலைநகரை நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்

 New convoy of over 1,500 vehicles makes way from Punjab to Delhi : கிஷான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியில் சார்பாக 7 மாவட்டங்களில் உள்ள 1000 கிராமங்களில் இருந்து 1500 வண்டிகளில் விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த வார இறுதியில் அவர்கள் டெல்லியை அடைந்துவிடுவார்கள். இந்த கமிட்டி தான் செப்டம்பர் மாத இறுதியில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு மாநிலத்தில் பெரிய அளவில் போராட்டத்தை முன்வைத்தது.

கெ.எம்.எஸ்.சி. தலைவர்கள் இது குறித்து கூறிய போது 2 வாரங்களுக்கு முன்பு குந்திலி எல்லையில் டெல்லியை அடைந்த விவசாயிகளுக்கு ஓய்வு அளித்துவிட்டு புதிதாக போராட்டத்தில் இவர்கள் ஈடுபட இருப்பதாக கூறியுள்ளனர். டெல்லியின் எல்லைப் பகுதிகளில் ஏற்கனவே அதிகப்படியான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்றால் விரும்பிய இடத்தில் போராட்டம் மேற்கொள்வோம்ம். குந்தியில் இருக்கும் விவசாயிகள் வீடுகளுக்கு செல்லும் பட்சத்தில் அவர்களின் இடத்தை நிரப்புவோம் என்று அந்த அமைப்பின் தலைவர் சத்னம் சிங் பன்னு தெரிவித்துள்ளார்.

அமிர்தசரஸ், குர்தஸ்பூர், தரான் தரான், ஜலந்தர், ஹோஷியாபூர், ஃபெரோஜெபூர், மற்றும் மொகாவில் இருந்து புதிதாக விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க வருகின்றனர். ஒவ்வொரு பகுதியினரும் மற்றவர்களுடன் இணைந்து தங்களின் பயணத்தை தேசிய நெடுஞ்சாலை 1-ல் நேற்று 5 மணி அளவில் ஆரம்பித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் அங்கிருந்து டெல்லியை நோக்கி புறப்படுவார்கள். அப்போது தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்று பன்னு தெரிவித்தார்.

கிட்டத்தட்ட 30 ஆயிரம் விவசாயிகள் இந்த கான்வோயில் வருவதாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் தவிர 1000 பேர் கார்களில் வருவதாக கூறப்பட்டுள்ளது. மாவட்ட அதிகாரிகள் டெல்லியை நோக்கி படையெடுக்கும் போராட்டக்காரர்கள் மற்றும் வாகனங்களை எண்ணவில்லை என்று கூறினார்கள்.

எங்களுடன் கம்பளிகள், ஆடைகள், உணவுப் பொருட்கள், எல்.பி.ஜி. சிலிண்டர்கள், வாளிகள் என அனைத்தையும் எடுத்து வந்துள்ளோம். பெரிய அளவிலான போராட்டத்திற்கு தயார் நிலையில் நாங்கள் இங்கே வந்துள்ளோம். எங்களின் வாகனங்கள் தண்ணீர் புகாத ஷீட்களால் மூடப்பட்டுள்ளது. மேலும் நாங்கள் டெல்லியின் காலநிலைக்கு ஏற்றவகையில் எங்களை தயார் செய்து உள்ளோம் என்று சந்து , கே.எம்.எஸ்.சி. செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். அவர் தல்வண்டி நெபாலன் கிராமத்தில் இருந்து வந்துள்ளார்.

முதலில் சென்ற விவசாயிகள் டெல்லி எல்லையை சனிக்கிழமை மதியம் அடையும் போது மற்றவர்கள் ஹரியானாவின் ஷாபாத் மர்கந்தாவில் நிற்பார்கள். ஜூன் ஜூலை மாதத்திலேயே நாங்கள் கூறியதை அரசு கேட்டிருக்க வேண்டும். இப்போது டெல்லி ஒன்றும் அவ்வளவு தூரம் இல்லை என்று பன்னு கூறினார்.  தனியார் நிறுவனங்கள் இதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதற்காகவே போராடுகிறோம் என்று போராட்டக்காரர்கள் பலர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம்  தெரிவித்தனர்.

மூன்று ஏக்கரை கொண்டுள்ள சிறிய விவசாயி நான். என்னுடைய தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். என்னுடைய சகோதரர்கள் இருவருக்கும் இந்த நிலத்தில் உரிமை உள்ளது. வேளாண் சட்டங்கள் எங்களுக்கு மரண தண்டனையை போன்றது. ஒப்பந்த விவசாய முறை தனியார் நிறுவனங்களால் கடுமையாக முன்னெடுக்கப்படுமானால், நான் அவர்களின் நிலத்தில் வேலை செய்யும் நிலை வருமோ? அதனால் தான் நான் இந்த போராட்டத்தில் பங்கேற்றேன் என்று அமந்தீப் சிங் என்ற 31 வயது விவசாயி கேள்வி எழுப்புகிறார்.

“இந்த நிலம் என்னுடையதாக இல்லாமல் போனால் என்ன செய்வது? எனக்காகவும் எனது வருங்கால சந்ததியினருக்காகவும் நான் போராட வேண்டும். வயல்கள் எங்கள் தாய்நிலம். விவசாயிக்கு தனது நிலத்தின் மீது மிகுந்த பாசம் உண்டு. இந்த சட்டங்கள் நல்லதல்ல ”என்று பெரோஸ்பூரில் உள்ள லால்ஷியன் கிராமத்தைச் சேர்ந்த தரம் சிங் சித்து கூறுகிறார்.

காவல்துறையினர் மிகக் குறைவாக இருப்பதால், விவசாயிகளின் நடமாட்டத்தைத் தடுக்க மாட்டோம் என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். “எங்களின் டிராக்டர்களின் இயக்கம் குறித்து எந்தவிதமான சோதனையும் செய்யவில்லை. இந்திய அரசியலமைப்பு நாட்டில் மக்களை எங்கும் பிரச்சனை இன்றி செல்ல அனுமதிக்கிறது ”என்று லூதியானாவில் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  “டிராக்டர்களின் இயக்கம் இப்போது வழக்கமாக உள்ளது. பலர் செல்கிறார்கள், பலர் திரும்பி வருகிறார்கள், ”என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.