கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக, பொறியியல் கல்லூரிகளுக்கு 2021 ஏப்ரல் வரை ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின்னர், மத்திய அரசு தளர்வுகளுடன் பள்ளி, கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, தமிழகத்தில் கல்லூரிகளில் டிசம்பர் 7ம் தேதி முதல் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு நிலையான சுகாதார வழிக்காட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில், பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழி வகுப்புகள் மட்டுமே இது வரை நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில், அண்ணா பல்கலைகழகம் மாநில முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் நடப்பு கல்வியாண்டு முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் மட்டும் தொடரும் என்று அறிவித்துள்ளது. மேலும், 2021 ஏப்ரல் வரை ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
மேலும், இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு மட்டும் 2020 டிசம்பர் முதல் 2021 ஏப்ரல் வரை நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் ஆன்லைன் வகுப்புகளில் ஒரு நாளைக்கு 5 பாட வேளைகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிடப்பட்டுள்ளது.