உத்தரபிரதேச அரசு சமீபத்தில் உலகெங்கிலும் உள்ள தாரு பழங்குடி இனத்தின் தனித்துவமான கலாச்சாரத்தை முன்னெடுக்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. தாரு கிராமங்களை சுற்றுலா வரைபடத்தில் குறிப்பிடுவதும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், பழங்குடி மக்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை ஏற்படுத்துவதும் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.
இந்த திட்டம் எதைப் பற்றியது?
நேபாளத்தின் எல்லையிலுள்ள பல்ராம்பூர், பஹ்ரைச், லக்கிம்பூர் மற்றும் பிலிபிட் மாவட்டங்களில் உள்ள தாரு பழங்குடி இன மக்களின் கிராமங்களை உ.பி. வனத்துறையின் வீடுகளில் தங்கும் திட்டத்துடன் இணைப்பதற்கு மாநில அரசு செயல்பட்டு வருகிறது. முக்கியமாக காடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட புற்களால் ஆன பாரம்பரிய குடிசைகளில், இயற்கையான தாரு மக்களின் வாழ்விடங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்கும் அனுபவத்தை வழங்குவதே இதன் நோக்கம் ஆகும்.
உத்தரப் பிரதேச வனக் கழகம் பார்வையாளர்களுடன் நல்ல முறையில் தொடர்புகொள்வதற்கு தாரு மக்களுக்கு பயிற்சியளிக்கும். மேலும், கிராமவாசிகள் பாதுகாப்பு மற்றும் தூய்மை அம்சங்களையும், வன விதிகளையும் அறிந்துகொள்ள உத்தரப் பிரதேச வனக் கழகம் ஊக்குவிக்கும்.
தாரு பழங்குடி வீட்டு உரிமையாளர்கள் தங்குமிடம் மற்றும் வீட்டில் சமைத்த உணவுக்காக சுற்றுலாப் பயணிகளிடம் நேரடியாக கட்டணம் வசூலிக்கலாம். உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் அவர்களுடன் தங்குவதன் மூலமும் அவர்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் மற்றும் உடையை அவதானிப்பதன் மூலமும் சிறப்பு தாரு கலாச்சாரம் ஒரு புதிய பண்பைப் பெறும் வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும் என்று உ.பி. அரசு எதிர்பார்க்கிறது.
சில வாரங்களில் தாரு கிராமங்களை இணைப்பதற்கு வீடு தங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கூடுதல் வனத்துறை முதன்மை கன்சர்வேட்டர் ஈவா தெரிவித்துள்ளார்.
தாருக்கள் யார்?
இந்த சமூகம் டெராய் காடுகளின் தாழ்வான பகுதிகள் மற்றும் சிவாலிக் மலைகள் அல்லது இமயமலையின் வெளிப்பகுதியில் அமைந்துள்ள மலைத் தொடரின் மத்தியப் பகுதியைச் சேந்தவர்கள். அவர்களில் பெரும்பாலோர் காடுகளில் வசிப்பவர்கள். சிலர் விவசாயம் செய்கின்றனர். தாரு என்ற சொல் ஸ்தாவிர் என்ற சொல்லில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. இதற்கு தேரவாத பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் என்று பொருள்.
தாருக்கள் இந்தியாவிலும் நேபாளத்திலும் வாழ்கின்றனர். இந்திய டெராய் காடுகளிலும், அவர்கள் பெரும்பாலும் உத்தரக்காண்ட், உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் வாழ்கின்றனர். 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உத்தரபிரதேசத்தில் இந்த பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 11 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது; இந்த எண்ணிக்கை இப்போது 20 லட்சத்தை தாண்டிவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பழங்குடி இன மக்கள் தொகையில் மிகப்பெரும் பகுதியாக உ.பி.யின் தாரு மக்கள் உள்ளனர். இந்த பழங்குடி இன மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் வளர்க்கப்படும் கோதுமை, சோளம் மற்றும் காய்கறிகளில் உண்டு வாழ்கின்றனர். பெரும்பான்மையானவர்கள் இன்னும் காட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
தாரு மக்களின் மொழி, உணவு, கலாச்சாரத்தில் சிறப்பு என்ன?
அவர்கள் இந்தோ-ஆரிய துணைக் குடும்ப மொழியான தாருவின் பல்வேறு கிளைமொழிகளையும், இந்தி, உருது மற்றும் அவதி மொழிகளின் வகைகளை பேசுகிறார்கள். மத்திய நேபாளத்தில், அவர்கள் மாறுபாட்ட போஜ்புரி பேசுகிறார்கள். கிழக்கு நேபாளத்தில், அவர்கள் மைதிலி மொழியின் மாறுபட்ட வடிவத்தைப் பேசுகிறார்கள்.
தாருக்கள் சிவனை மகாதேவர் என்று வணங்குகிறார்கள். மேலும் அவர்களின் உயர்ந்த கடவுளாக நாராயணன் என்று கூறுகிறார்கள். அவர்கள் இந்த கடவுள்கள்தான் சூரிய ஒளி, மழை மற்றும் அறுவடைகளை வழங்குபவர் என்று நம்புகிறார்கள். பிரதான வட இந்திய இந்து மத வழக்கத்தில் பெண்களுக்கு அனுமதிக்கப்படுவதை விட தாரு பெண்களுக்கு வலுவான சொத்துரிமை உள்ளது.
பெரும்பாலான தாரு பழங்குடியினர் மதுபானங்களை உட்கொள்கிறார்கள். சிலர் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். தாருக்களின் உணவுத் தட்டில், பாகியா அல்லது திக்ரி உணவு வகைகள் உள்ளன. இது அரிசி மாவின் வேகவைத்த உணவாகும். இது சட்னி அல்லது காய்கறியுடன் உண்ணப்படுகிறது. கொத்தமல்லி, மிளகாய், பூண்டு மற்றும் வெங்காயத்தால் செய்யப்பட்டு கறியாக சமைக்கப்படும் நத்தை உணவான கொங்கி சாப்பிடப்படுகிறது