In UP, ‘love jihad’ has two faces: man jailed in one case, woman gets police escort in other : உ.பியில் இரண்டு வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு நிபந்தனைகளை விதிக்கும் மதமாற்ற எதிர்ப்பு சட்டம் நடைமுறைக்கு வந்து 9 நாட்கள் ஆன நிலையில் இதுவரையில் 56 வழக்குகள் பதிவாகியுள்ளது. 24 மணி நேரத்தில் பதிவான இரண்டு வழக்குகள் ஒரு கூர்மையான மாறுபாட்டை முன்வைக்கின்றது. மேலும் புதிய சட்டத்தை காவல்துறையினர் எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பதையும் விளக்குகிறது.
பரெய்லியில் சனிக்கிழமை அன்று, தன்னுடைய மகள் மதமாற்றம் செய்து கொண்டு இந்து ஒருவரை கல்யாணம் செய்து கொண்டார் என்று அப்பெண்ணின் தந்தை அளித்த புகாரை காவல்துறை ஏற்க மறுத்துவிட்டது. மேலும் இந்த சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு செப்டம்பர் மாதமே அப்பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றுவிட்டது என்ற பெண்ணின் சாட்சியத்தின் அடிப்படையில் இந்த வழக்கு எடுக்கப்படவில்லை என்று கூறினார்கள்.
ஆனால் சனிக்கிழமை அன்று மொரதாபாத்தில் காவல்துறை முஸ்லீம் நபர் ஒருவரை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர். அவருடைய மனைவி தங்களுக்கு ஜூலை மாதத்திலேயே திருமணம் நடைபெற்றுவிட்டது என்று கூறியும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்த நபரின் சகோதரனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பரெய்லியில் அந்த பெண் அவருடைய கணவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது. அதே நேரத்தில் மொரதாபாத்தில் காவல்துறை அந்த பெண்ணை அரசு பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பிவைத்துள்ளது. சனிக்கிழமையன்று, 22 வயதான அலிஷாவின் தந்தை ஷாஹித் மியான், பரேலியில் உள்ள பிரேம் நகர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார், தனது மகள் அவர் பணிபுரிந்த ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட மூன்று நபர்களால் கடத்தப்பட்டதாகக் கூறினார்.
அலிஷாவை மணந்த சித்தார்த் சக்சேனா எனப்படும் அமன் (24) தவிர, எஃப்.ஐ.ஆரில் அவருடைய சகோதரி சஞ்சல், மற்றும் மனோஜ் குமார் சக்சேனா என்றும் பெயரிட்டார். குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் பரேலியில் வசிப்பவர்கள்.
முதன்மை தகவல் அறிக்கையில் டிசம்பர் 1ம் தேதி அன்று தன்னுடைய அலுவலகத்தில் நிலுவையில் இருக்கும் தொகையை பெற சென்ற தன்னுடைய மகள் திரும்ப வரவில்லை. அவருடைய போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது. அவருடைய அலுவலகத்திற்கு சென்ற போது சக்சேனா எந்த தகவல்களையும் தரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் மியான். மேலும் தன்னுடைய மகளை கல்யாணம் செய்ய கூறி அமன் அழுத்தம் கொடுத்ததாகவும், அதனால் தான் தன்னுடைய மகள் வேலையை விட்டு நின்றதாகவும் கூறினார். மேலும் மனோஜ் குமார் மற்றும் சஞ்சல் ஆகியோர் அமனை ஆலிஷா திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய ஸ்டேசன் ஹவுஸ் ஆஃபிசர் அவனீஷ் குமார் வழக்கு பதிவு செய்யபட்டவுன், விசாரணைக்காக ஆலிஷா வரவழைக்கப்பட்டார். அப்போத் அவர் தான் ஒரு மேஜர் என்றும் கடத்தப்பட்டதாக கூறப்படும் புகார் பொய் என்றும் கூறினார். மேலும் அவர் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே அமனுடன் சென்றதாகவும் கூறினார். அமனை ஆர்ய சமாஜ் கோவிலில் செப்டம்பர் 29ம் தேதி அன்றே திருமணம் செய்து கொண்டதாகவும், அதனை வீட்டில் இருந்து மறைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த பெண் தன்னுடைய திருமண ஆவணங்களை கையில் கொண்டு வந்தார்.
காவல்துறையினர் ஆலிஷாவின் உடலை பரிசோதனை செய்தனர். அவருடைய குடும்பத்தால் அடையாளம் காணப்பட்டார். திங்கள் கிழமை மாஜிஸ்திரேட் முன்பு அவரிடம் இருந்து ஒரு அறிக்கையை பெற்றனர். காவல்துறையிடம் கூறியதையே அவர் அங்கு மீண்டும் உறுதி செய்தார். மகள் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பதை தந்தை அவருடைய புகாரில் தெரிவிக்காத காரணத்தால் அந்த சட்டத்தை நாங்கள் செயல்படுத்தவில்லை என்று காவல்துறை குறிப்பிட்டனர். ஆனால் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய மியான், திருமணம் மதமாற்றம் செய்யாமல் நடைபெற முடியாது. புதிய சட்டத்தை செயல்படுத்துங்கள் என்று நான் காவல்துறையிடம் கேட்டேன். அதனை அவர்கள் கேட்கவில்லை.
புதிய சட்டம் ஏன் செயல்முறைப்படுத்தப்படவில்லை என்று கேட்ட போது சர்க்கிள் ஆஃபிசர் திலீப் சிங், “இந்த திருமணம் செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது இந்த சட்டங்கள் நடைமுறையில் இல்லை என்று கூறினார். பரெய்லி ஏ.எஸ்.பியிடம் பேசிய போது, அந்த பெண் அந்த இளைஞருக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்துள்ளார் என்று கூறியுள்ளார். இருப்பினும் மொரதாபாத்தில் காவல்துறையினர் வேறு வழிமுறைகளை கையாண்டனர்.
கந்த் பகுதியில் பிங்கி என்ற பெண்ணுடன் தன்னுடைய திருமணத்தை பதிவு செய்ய சென்ற ரஷீத் அலி (22) கைத் செய்யப்பட்டார். அவருடன் சென்ற அண்ணன் சலீம் அலியும் (25) கைது செய்யப்பட்டார்.
பிஜ்னூரில் காவல்நிலையத்தில் புகார் அளித்த பிங்கியின் குடும்பத்தார், ரஷீத் அலி, திருமணம் மூலம் தன்னுடைய மகளை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்தார் என்று கூறியுள்ளனர். நான் ரஷீதை ஜூலை 24ம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டேன். அப்போது இருந்தே மொரதாபாத்தில் உள்ள கந்த் பகுதியில் தான் வசித்து வருகின்றேன். என்னுடைய விருப்பப்படியே நான் அவரை திருமணம் செய்து கொண்டேன் என்று பிங்கி கூறியுள்ளார்.
சர்க்கிள் ஆஃபிசர் பல்ராம் இது குறித்து கூறும் போது, பிங்கியின் தாயார், ரஷீத் தன் மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்றும் மதமாற்றம் செய்துள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். அவருடைய புகாரில், என்னுடைய மகளை திருமணம் செய்து கொள்வதற்காக ரஷீத் பிங்கியை கந்திற்கு அழைத்து வந்துள்ளார். நாங்கள் அவரை பின்பற்றினோம். பின்பு தான் தெரிந்தது அவர் ஒரு இஸ்லாமியர் என்று. அவருடைய அடையாளத்தை அவர் மறைத்துவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
திங்கள் கிழமை அன்று, காவல்துறை அந்த பெண்ணுக்கும் ரஷீத்துக்கும் ஜூலையிலேயே திருமணம் நடைபெற்றது என்ற கூற்றை ஆராய்ந்தீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, விசாரணையின் போது தான் இது தெரியவரும். இதுவரையில் அந்த பெண் திருமணம் தொடர்பாக எந்தவிதமான ஆவணங்களையும் சமர்பிக்கவில்லை என்று கூறினார்.
ரஷீத் மற்றும் சலீம் ஆகியோர் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏடிஜிபி (பரேலி மண்டலம்), அவினாஷ் சந்திராவை தொடர்பு கொண்டபோது, “மொராதாபாத் காவல்துறை எந்த சூழலில் அவர்களை கைது செய்தனர் என்பதை நான் சரிபார்க்க வேண்டும்.” என்று கூறினார்
நவம்பர் 28ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த Prohibition of Unlawful Conversion of Religion Ordinance, 2020 சட்டம், சட்ட விரோத வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தை முடிவுக்கு கொண்டு வருதாக கூறப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்பவர்களுக்கு விருப்பம் இருந்தாலும் கூட திருமணத்திற்காக மதம் மாறுவதை இச்சட்டம் தடுக்கிறது. இதன் மூலம் ஒருவர் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற வாய்ப்புகள் உண்டு.