வெள்ளி, 11 டிசம்பர், 2020

முஸ்லிம்களின் உடல்களை மத நம்பிக்கைக்கு எதிராக தகனம்: இலங்கையில் சர்ச்சை

 இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 19 முஸ்லிம்களின் சடலங்களை சர்ச்சைக்குரிய வகையில் முஸ்லிம்களின் மத நம்பிக்கைக்கு எதிராக அவர்கள் குடும்பங்களின் ஆட்சேபனைகளை மீறி தகனம் செய்வதாக இலங்கை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இலங்கையில் அக்டோபர் மாதத்திலிருந்து கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்தது. அதன்பின்னர் தொற்றுகளின் எண்ணிக்கை 8 மடங்கிற்கும் மேலாக 29,300 மாக அதிகரித்தது. 142 பேர் இறந்துள்ளனர்.

அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் குடும்பங்களால் உரிமை கோரப்பட்டு பின்னர் சுகாதார அதிகாரிகளின் கடுமையான மேற்பார்வையின் கீழ் தகனம் செய்யப்படுகிறது. இது இஸ்லாமிய சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட ஒரு நடைமுறை ஆகும்.

ஆனால், கொழும்புவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் பலியான 19 முஸ்லிம்களின் உடல்களை அவர்களின் குடும்பங்கள் உரிமை கோர மறுத்துவிட்டன.

“எந்த குடும்பங்களாலும் உரிமை கோரப்படாத கொரோனாவால் பலியானவர்களின் உடல்கள் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் தகனம் செய்யப்படலாம்.” என்று இலங்கை சட்ட அமைச்சர் டி லிவேராவின் செய்தித் தொடர்பாளர் கூறினார். மேலும், அவர் உடல்கள் இந்த வாரம் தகனம் செய்யப்படும் என்று கூறினார்.

அப்படி, 5 பேர் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டனர் என்று இலங்கை போலீசார் தெரிவித்தனர்.

இலங்கை சிறுபான்மை சமூகம் மற்றும் சிவில் சமூக குழுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த 12 மனுக்களில் இலங்கை அரசின் இந்தக் கொள்கையை முஸ்லிம்கள் எதிர்த்துள்ளனர்.

இலங்கை அரசு இந்த முடிவை ஏன் எடுத்தது என்பதற்கான காரணங்களைத் தெரிவிக்காத நிலையில், கடந்த வாரம் மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

அந்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்று இலங்கை முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இலங்கை முஸ்லிம் க்கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், முஸ்லிம்கள் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால் மருத்துவ உதவி பெற அஞ்சுகிறார்கள். ஏனெனில், ஒருவேளை அவர்கள் இறக்க நேரிட்டால் அவர்களுடைய உடலை தகனம் செய்யப்படுவதை விரும்பவில்லை.” என்று கூறினார்.

இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பு கடந்த மாதம் கொழும்பு முஸ்லிம்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அவர்களின் மத நம்பிக்கைகள் மற்றும் கடமைகளுக்கு ஏற்ப அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு வலியுறுத்தியது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கும் செல்வாக்கு மிக்க பௌத்த பிக்குகள், புதைக்கப்படும் உடல்கள் நிலத்தடி நீரை மாசுபடுத்தி நோயைப் பரப்பக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் ஏப்ரல் மாதத்தில் இலங்கை அரசு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதைக் கட்டாயமாக்கியது.

ஆனால், உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் மற்றும் தகனம் செய்வது என இரண்டையுமே அனுமதிப்பதாக கூறுகிறது.

இலங்கையில் உள்ளூர் ஜிஹாதிகள் 2019ம் ஆண்டு ஈஸ்டர் கொடிய குண்டுவெடிப்பின் பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர், இலங்கையின் 21 மில்லியன் மக்கள்தொகையில் 10 சதவிகிதம் உள்ள முஸ்லிம்களுக்கும், பெரும்பான்மையான சிங்களவர்களுக்கும் இடையில் தொடர்ந்து பதட்டங்கள் நிலவுகின்றன.