இங்கிலாந்தில் பெருகி வரும் புதுவகையான கொரோனா தொற்று காரணமாக, இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு விமான போக்குவரத்து தடை செய்யப்படுவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த தடை உத்தரவு இன்று இரவு முதல் (டிசம்பர் 22) வரும் டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரேனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் தீவிர பாதிப்பு ஏற்படுத்தியது. தற்போது உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஒரு சில நாடுகளில் கொரோனா தொற்று தனது 2-வது அலையை தொடங்கியுள்ளது. இதில் இங்கிலாந்து கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வந்த நிலையில் தற்போது புதுவகையாக வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்புக்கு கோவிட் 20 என அழைக்கப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து பரவி வரும் இந்த புதுவகை வைரஸ் பாதிப்பினால், உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. மேலும் இங்கிலாந்தில் இந்த வைரஸ்பாதிப்பு காரணமாக இந்திய பங்குச்சந்தை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இந்த புதுவகை வைரஸ் பாதிப்பு காரணமாக இந்திய அரசு இங்கிலாந்து நாட்டுக்கான விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. மேலும் இந்த உத்தரவு இன்று முதல் வரும் டிசம்பர் 31-வது அமலில்இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் பரிந்துரையின் அடிப்படையில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த காலகட்டத்தில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இயக்கப்படும் சுமார் 60 விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
இது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டர் பதிவில், “சில நாடுகளில் புதிய கொரோனா வைரஸின் தாக்கம் இருப்பதால், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க முடிவு செய்துள்ளோம். இதன் காரணமாக இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானங்களும் 2020 டிசம்பர் 22 முதல் 31 டிசம்பர் வரை தற்காலிகமாக நிறுத்தப்படும் ”என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், இங்கிலாந்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதுவகை வைரஸ், நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான மரபணு மாற்றங்கள் உள்ளன. இதனால் இந்த வைரஸ் பரவலை திறம்பட சமாளிக்க பிற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் “இரண்டரை மாதங்களுக்கும் மேலாக புதிய கோவிட் -19 வைரஸ் அதிக எண்ணிக்கையில் தொடர்ச்சியான பரவி வருகிறது. “இந்த சூழ்நிலையில், விமானப் பயணம் கொண்ட பயணிகள் மூலம் இந்த வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தொற்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் இதனால் இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிலையங்களுக்கு வரும்போது கட்டாய ஆர்டி பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த புதுவகை கொரோனா தொற்று காரணமாக, கனடா, ஜெர்மனி, நெதர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, சுவீடன், குவைத், ஈரான், இஸ்ரேல் மற்றும் ஹாங்காங் ஆகியவை இங்கிலாந்துடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளது. இந்தியா இங்கிலாந்து நாடுகளுக்கிடையில் அதிக எண்ணிக்கையிலான விமான போக்குவரத்து நடைபெறுகிறது. இதில் லண்டன்-டெல்லி இடையே ஒவ்வொரு வாரமும் நான்கு விமான நிறுவனங்களும் சேர்ந்து 21 விமானங்களை இயக்குகின்றன.
மும்பை மற்றும் லண்டன் இடையே ஒவ்வொரு வாரமும் 12 விமானங்கள் உள்ளன. ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, அகமதாபாத், கொச்சி, கோவா, அமிர்தசரஸ் ஆகிய நகரங்களில் இருந்து லண்டனுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறன்றன. தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த விமானங்கள் அனைத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
source: https://tamil.indianexpress.com/india/new-corona-spreading-in-the-uk-india-cancels-air-traffic-238320/