திங்கள், 1 நவம்பர், 2021

கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

 1 11 2021 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாகவும், குறைந்த காற்றழுத்த பகுதி காரணமாகவும் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நவம்பர் 1ஆம் தேதி (இன்று) முதல் 2ஆம் தேதி (நாளை) வரை டெல்டா மாவட்டங்கள் (தஞ்சை, திருவாரூர், நாகை) புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாவட்டங்கள், காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை காரணமாக விழுப்புரம், நெல்லை, வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர் மாவட்டங்களில் இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு 1 – 8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்படவுள்ள நிலையில், மழை காரணமாக அது சற்று தள்ளிப்போயுள்ளது.

சென்னை நிலவரம்

சென்னையில் நேற்றிரவு முதல் காலை வரை மழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று, சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-weather-update-school-shut-down-in-6-districts-due-to-heavy-rain/