வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல பகுதகளில் நீர்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் தலைநகர் சென்னையில் அனைத்து இடங்களிலும் வீடுகளில் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு மருத்துவமனை செல்லும் வழியில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி, இருப்பதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த மருத்துவமனயில் இருந்து அனைத்து நோயாளிகளும், வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பழனிவேல் தெரிவித்தார்.
இதில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுடன் தாய்மார்கள் உட்பட சுமார் 77 நோயாளிகள் இருந்தனர். அதில் 55 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 22 பேர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் எழும்பூரில் உள்ள ஐஓஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார். சுகாதாரத் துறை அதிகாரிகள் அனைத்து நோயாளிகளையும் ஆம்புலன்ஸ் மூலம் மற்ற மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டதாக கூறினார்.
இதே போல் கே.கே.நகர் பெரிஃபெரல் மருத்துவமனையிலும் தண்ணீர் புகுந்ததால், இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து நோயாளிகளில், மூன்று பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இரண்டுபேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மேலும் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்ற அதிகாரிகளுடன் மருத்துவமனைக்கு சென்று, தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் மிக கனமழைக்கு விடப்பட்டிருந்த ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை இன்று மாலை கரையை கடந்தது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-tambaram-govt-hospital-patients-shifted-out-as-two-govt-hospitals-368047/