சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது போன்று தோன்றினாலும் கூட, கடந்த ஒரு வாரம் பெய்த கனமழையின் தாக்கத்தை சாலைகளில் காண இயலும். பல்வேறு துறை சார் ஊழியர்கள் சாலையில் தேங்கியிருக்கும் வெள்ள நீரை நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பழுதடைந்த சாலைகள், முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்துதல் போன்ற பணிகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனாலும் இந்த நிம்மதி பெருமூச்சு சில காலம் மட்டுமே நீடித்திருந்தது. ஏன் என்றால் இன்று மீண்டும் வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது. இது மேலும் சென்னைக்கு அதிக மழையை கொடுக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் பெய்த கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18-ஐ எட்டியுள்ளது. அதில் சென்னை, சிவகங்கை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் தலா 3 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்று பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர். ராம்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
இந்த ஒரு வாரத்தில் சென்னை இரண்டு மிகப்பெரிய மழைப்பொழிவை சந்தித்துள்ளது. நவம்பர் 6 மற்றும் 7 தேதிகளுக்கு இடையே மட்டும் சென்னையில் 210 மி.மீ. மழையை பெற்றுள்ளது. நவம்பர் 12ம் தேதி அன்று சராசரியாக 60.6 மி.மீ மழையை பதிவு செய்துள்ளது.
நவம்பர் 7 முதல் 12 தேதிகளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. ஆனால் நான்கு மாவட்டங்களில் மட்டும் இயல்பைக் காட்டிலும் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது என்று சென்னை மண்அல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.
சென்னை இயல்பைக் காட்டிலும் 5 மடங்கு கூடுதலாக மழைப் பொழிவைப் பெற்றுள்ளது. எப்போதும் இந்த காலத்தில் 8 செ.மீ மழையை மட்டுமே பெறும். ஆனால் இம்முறை 46 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்றும் அவர் கூறினார். அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் 12ம் தேதி வரை கிட்டத்தட்ட 81 செ.மீ மழைப் பொழிவைப் பெற்றுள்ளது சென்னை. இது இயல்பைக் காட்டிலும் 85% கூடுதலான மழைப்பொழிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 464 குழந்தைகள் உட்பட 2,888 நபர்கள் சென்னையில் உள்ள 44 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
2015 சோகத்திற்குப் பிறகு தற்காலிக வேலைகள் மட்டுமே செய்யப்பட்டன. நிரந்த தீர்வுகள் ஏதும் செய்யப்படவில்லை. ஆக்கிரமிப்புகளை நீக்குதல், சாம்பல், நகராட்சி கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் நதிப் படுகைகளில் கொட்டப்படுவதை நிறுத்துதல் மற்றும் பல தசாப்தங்களாக பழமையான மழைநீர் வடிகால்களை மூடுவது போன்ற நிரந்தர தீர்வுகளை வழங்கும் செயல்கள் ஏதும் செய்யப்படவில்லை என்று உள்ளூர் மக்கள் கருதுகின்றனர்.
வெள்ள நிவாரணப் பணிகள் தோல்வி அடைய முந்தைய அதிமுக அரசு தான் காரணம் என்று அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார். முந்தைய ஆட்சியில், ஏரிகள் மற்றும் சாலைகளில் எல்லா இடங்களிலும் தண்ணீர் இருந்தது. அதே அதிகாரிகள் இப்போது வேலை செய்கிறார்கள், ஆனால் நிவாரணம் மற்றும் மீட்புக்காக அவர்களை விரைவாகச் செயல்பட வைக்கும் திறன் எங்கள் முதல்வருக்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.
செங்கல்பட்டு மற்றும் காஞ்சி மாவட்டங்களில் மழை நீரால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்ட முதல்வர் பருவமழை காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு தீர்வு காணும் வகையில் மருத்துவ முகாம்களை துவங்கி வைத்தார். இது போன்று சென்னையில் 200 இடங்களில் மருத்துவ முகாம்கள் திறக்கப்படும் என்றும் அவர் ட்வீட் செய்டிருந்தார்.
மயானங்களில் பணியாற்றும் நபர் ஒருவர் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து அவரை தூக்கி மருத்துவமனையில் சேர்த்த காவல்துறை அதிகாரி ராஜேஸ்வரிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார் முதல்வர்.
எதிர்க்கட்சி தலைவர்கள் பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/northeast-monsoon-imd-warns-of-more-rain-in-chennai-368491/