இடைத் தேர்தல்களில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வியே நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிந்தம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.5 மற்றும் ரூ.10 குறைத்து மத்திய அரசு நேற்று (நவம்பர் 3) அறிவிப்பு வெளியிட்டது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்ட நிலையில், மத்திய அரசு நேற்று பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “இவ்வளவு நாள் மத்திய அரசின் பேராசையினால் தான் பெட்ரோல், டீசல் அதிக விலைக்கு விற்கப்பட்டதாகவும் அதிக வரி விதிப்பினால் தான் பெட்ரோல் டீசல் அதிக விலைக்கு விற்கப்பட்டது என்பது தற்போது உறுதியாகி உள்ளது” என்று விமர்சித்துள்ளார். மேலும், 30 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வியே இந்த திடீர் பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு காரணம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் விமர்சனத்துக்கு பதில் அளித்துள்ள மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “மக்களின் உணர்வுகளை உணர்ந்து அவர்களின் துயரத்தைப் போக்குவதற்காக பெட்ரோல் டீசல் விலை மீதான வரியை குறைத்ததை நீங்கள் விமர்சனம் செய்கிறீர்கள் என்றால் அதனை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/p-chidambaram-says-bjp-failure-in-by-poll-results-is-reason-for-reduction-in-petrol-diesel-price-364850/