1 11 2021 தமிழ்நாடு அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்துவதில் சந்திக்க உள்ள சில சவால்களை பள்ளிக்கல்வித் துறையினர் சுட்டிக் காட்டுகின்றனர். ரூ.1,000 மாத ஊதியத்திற்கு 1.7 லட்சம் தன்னார்வலர் ஆசிரியர்களை நியமிப்பது என்பது கடினமாக இருக்கும் என்றும் பல கிராமங்களில் தன்னார்வாலர்களை நியமிப்பது சவாலாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
தமிழக அரசின் லட்சியத் திட்டமான ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ கல்வியாளர்களால் வரவேற்கப்பட்டாலும், இந்த திட்டத்தில் லட்சக்கணக்கான படித்த தன்னார்வலர்களை நியமிப்பது உள்ளிட்ட பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்பதால், பள்ளிக் கல்வித் துறையால் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, ஒரு பகுதியில் மாலை நேர வகுப்புகளுக்கு 20 மாணவர்களுக்கு தலா ஒரு தன்னார்வலர் என்று கணக்கிடப்பட்டால் 1.7 லட்சத்துக்கும் அதிகமான தன்னார்வலர் ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள்.
பள்ளிக் கல்வித் துறையைச் வட்டாரங்கள் கூறுகையில், இந்தத் திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடத்த இதுவரை சில ஆயிரம் தன்னார்வலர்கள் மட்டுமே தங்களைச் சேர்த்துக்கொள்ள முன்வந்துள்ளனர் என்று தெரிவிக்கின்றனர். மேலும், “கிராமப்புறங்களில் தன்னார்வலர்களைப் பெறுவது கடினமாக இருக்கும் என்றும் இந்த திட்டம், ஆரம்பத்தில், 6 மாதங்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்படும் என்பதால், பணி நியமனம் குறிப்பாக கிராமங்களில் வேகமாக செய்யப்பட வேண்டும்” என்று கூறுகின்றனர்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் எம்.மணிமேகலை ஊடகங்களிடம் கூறுகையில், வழக்கமாக பள்ளியில் படிப்பை முடித்துவிட்டு, மாலை 5 மணிக்கு மேல்தான் பெரும்பாலான மாணவர்கள் வீடு திரும்புவார்கள். அதனால், மாலை வகுப்புகளுக்கு விரைந்து செல்வது கடினம். மாலை வகுப்புகள் அதிக சுமையை உருவாக்கும் என்பதால் பல மாணவர்கள், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மாலை நேர வகுப்புகளை தவிர்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை வரவேற்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.இளமாறன் ஊடகங்களிடம் கூறுகையில், கிராமப்புறங்களில், 7-8 வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளை பல்வேறு பணிகளுக்கு அனுப்பியுள்ளனர். அதனால், தங்கள் குழந்தைகளிடமிருந்து ஓரளவு வருமானம் பெறும் பெற்றோர்கள் மாலை வகுப்புகளைத் தவிர்க்க மட்டுமே அவர்களை ஊக்குவிக்கலாம் என்று அவர் கூறினார். அதனால், குழந்தைகள் தினமும் மாலை நேர வகுப்புகளில் கலந்துகொள்வதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்க வேண்டும். தன்னார்வலர்களுக்கான ஊதியம் தலா ரூ.2,000 ஆக இருக்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.
இருப்பினும், தமிழ்நாடு பெற்றோர்-ஆசிரியர் நலச் சங்கத்தினர், இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து கூறுகையில், இந்த திட்டம் மெதுவாகக் கற்கும் திறனுடைய மாணவர்களுக்கு மட்டுமே பொருத்தமானதாக இருக்கும். அந்த மாணவர்கள் பள்ளி திறந்தவுடன் அடையாளம் காணப்பட வேண்டும். அதைச் செய்வதற்குப் பதிலாக, அனைத்து மாணவர்களையும் அழைப்பது என்பது மாணவர்களுக்கு உதவாது. இந்த வேலை ஆறு மாதங்களுக்கு மட்டுமே என்பதால் தன்னார்வலர்களை நியமிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/illam-thedi-kalvi-scheme-will-face-challenges-school-education-experts-comment-363253/