கடந்த மாதம் அக்டோபர் 3 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவத்திலும் தொடர்ந்து நடந்த கலவரத்திலும் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆசிஷ் மிஸ்ராவை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான மகேந்திரா தார் எஸ்யூவி உட்பட 3 வாகனங்கள் ஏறியதில் தான் விவசாயிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சம்பவத்தில் இருந்தவர்களின் கூற்றுப்படி, துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், இறந்த 8 பேரின் உடலிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என்று தான் உடற்கூராய்வு முடிவுகள் வந்தன.
இருப்பினும், உத்தரப் பிரதேச காவல் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகளிடம் கைப்பற்றிய நான்கு துப்பாக்கிகளையும் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு (FSL) அனுப்பி வைத்தனர்.
அதன் ஆய்வக முடிவில், ஆசிஷின் துப்பாக்கி, முன்னாள் மத்திய அமைச்சர் அகிலேஷ் தாஸின் மருமகன் அங்கித் தாஸின் துப்பாக்கி மற்றும் தாஸின் பாதுகாவலர் லத்தீஃப் வைத்திருந்த ரிப்பீட்டர் துப்பாக்கி ஆகியவற்றிலிருந்து தோட்டாக்கள் வெளியானது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ” நான்காவது துப்பாக்கி தொடர்பான ஆய்வக முடிவுகள் இதுவரை வரவில்லை. ஆனால், மூன்று துப்பாக்கிகளிலிருந்து தோட்டாக்கள் சுடப்பட்டதை தடய அறிவியல் அறிக்கை உறுதி செய்துள்ளது. இந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதே சமயம், துப்பாக்கிகளில் தோட்டாக்கள் வெளியாகியிருந்தாலும், எந்த தேதியில் வெளியானது என்பது ஆய்வக முடிவில் தெரியவில்லை. தற்போது, சிறையில் உள்ள குற்றவாளிகள் தகுந்த ஆதாரத்துடன் தோட்டாக்கள் அக்டோபர் 3 ஆம் தேதி சுடப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்” என்றார்.
இந்த தடய அறிவியல் அறிக்கையால், தனது மகன் வன்முறை நிகழ்ந்த இடத்தில் இல்லை எனக் கூறி வந்த அமைச்சருக்கும் அவரது மகனுக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பம் முதலே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக விவசாயிகள் கூறிவந்த நிலையில், அவர்களது புகாரை ஆய்வக முடிவு பலப்படுத்தியுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/forensic-analysis-says-rifle-seized-from-mos-mishra-son-was-fired-367069/