2015ம் ஆண்டு ஏற்பட்ட சென்னை பெருவெள்ளம் மற்றும் இதர காலநிலை தொடர்பான நிகழ்வுகளின் போதும் மத்திய மற்றும் தென் சென்னையில் மட்டுமே அதிக அளவு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. ஆனால் கடந்த 5 நாட்களாக பெய்த கனமழையால், உழைக்கும் வர்கத்தினர் அதிகம் கொண்ட, தொழிற்சாலைகளை நிறைய கொண்டிருக்கும் வடசென்னை பெரிய பாதிப்பிற்கு ஆளானது.
மற்ற பகுதிகளைக் காட்டிலும் வட சென்னையில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்க காரணம் என்ன?
தாழ்நிலை புவியியல் அமைப்பு தான் இதற்கு காரணம். சென்னையில் மழை நீர் தேங்க பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று கடல் மட்டத்தில் இருந்து குறைவான அளவே உயரத்தில் இருப்பது. பெரும்பாலான பகுதிகள் 6 மீட்டர் மட்டுமே உயரம் கொண்டுள்ளது. மழைநீர் வடிகால் வலையமைப்புகள் இல்லாதது மற்றும் கால்வாய்களை சரியாக தூர்வாராத நிலை ஆகியவை வடசென்னையின் நிலைமையை மோசமாக்கியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தேங்கியுள்ள வெள்ள நீரை நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், ”கட்டுமானம் மற்றும் பிற வணிக நடவடிக்கைகளால் உருவாகும் குப்பைகள் தான் இந்த வெள்ளத்திற்கு முக்கியமான ஒரு காரணியாக அமைந்துள்ளது” என்று கூறினார்கள். இங்குள்ள புயல் நீர் வடிகால்கள் எண்ணிக்கையில் போதுமானதாக இல்லை மற்றும் தற்போதுள்ள நெட்வொர்க்குகள் மற்றும் கால்வாய்களும் தடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வடசென்னை கால்வாய்கள்
வடசென்னை பகுதியில் மொத்தம் 14 கால்வாய்கள் உள்ளன. பங்கிங்ஹாம் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், எக்காங்கிபுரம் கால்வாய், எய்ன்ஸ்லே கால்வாய், மாதவரம் உபரி வாய்க்கால் மற்றும் இணைப்பு கால்வாய் போன்ற கால்வாய்கள் வெள்ளத்தை தணிக்க உதவிய முக்கிய நீர்வழிகளாகும்.
ஆனாலும், இம்முறை வெள்ளத்தில் மூழ்கிய பெரும்பாலான தெருக்கள் மற்றும் சுற்றுப்புறங்களில், தண்ணீர் வடிவதற்கு வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டது. வடிகால்கள் இல்லாததால் மட்டுமல்ல, தவறான சாலைத் திட்டமிடல் காரணமாகவும் இந்நிலை ஏற்பட்டது. அங்கே அமைக்கப்பட்ட பல கான்க்ரீட் சாலைகள் இருபுறமும் அமைந்திருக்கும் வீடுகள் மற்றும் கட்டிடங்களைக் காட்டிலும் அதிக உயரமாக இருக்கிறது.
தாழ்வான பகுதிகள்
வியாசர்பாடி, புளியந்தோப்பு, கொடுங்கையூர், பட்டாளம் ஆகிய பெரிய சந்தைகள் வடசென்னையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாகும். வியாசர்பாடி, புளியந்தோப்பு பகுதிகளில் வெறும் 10 செ.மீ மழைக்கே முழங்கால் அளவு நீர் சேர்ந்துவிட்டது. பட்டாளம் போன்ற பகுதிகளில் கடந்த சனிக்கிழமை 22 செ.மீ., மழை பெய்ததால் இம்முறை வெள்ள நீர் வெளியேற வழியே இல்லாமல் போய்விட்டது.
வட சென்னையின் தொண்டியார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, மண்ணடி, அயனாவரம், ராயபுரம், திருவொற்றியூர், பெரியார் நகர், சிட்கோ நகர், எம்.கே.பி.நகர், ஜமாலியா, கொளத்தூர், ஓட்டேரி, பெரம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை காலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்க வாய்ப்புகள் உள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகள்
புளியந்தோப்பும் தற்போது பெய்து வரும் மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். புளியந்தோப்பு மெயின் ரோடு, பட்டாளம் மற்றும் கே.எம் கார்டன், திருவொற்றியூர், சூளை, ஜவஹர் நகர், பெரம்பூர் மற்றும் வியாசர்பாடியில் உள்ள பல சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக சாலைகள் மற்றும் குடியிருப்புகள், வணிகப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் நிலைமை மேலும் மோசம் அடைந்தது.
source https://tamil.indianexpress.com/explained/why-north-chennai-is-the-worst-hit-in-this-years-heavy-rains-368155/