11 11 2021 2015- ஆண்டை தொடர்ந்து, கடுமையான மழையைத் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. இதனால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள இந்த நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தீவிர நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை அதீதிவிர மழையாக தொடர்ந்து பெய்து வரும் நிலையில், தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவது, துரித நடவடிக்கை மேற்கொள்வது, முகாம்கள் தயார் நிலையில் வைப்பது உள்ளிட்ட செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
முதல்வர் ஸ்டாலின் கடலூர் பயணம்
மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் ஆய்வு செய்யவிருக்கிறார். அதன் முதல் கட்டமாக இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் செல்கிறார்.
அமைச்சர்கள் குழு அமைப்பு
மழை வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களைப் பார்வையிட்டு அறிக்கை அளிப்பதற்குத் தனி அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்தக் குழுவில் தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ரகுபதி, அன்பில் மகேஷ், மெய்யநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/stalin-visit-to-cuddalore-heavy-rainfall-in-tamilnadu-367773/