வெள்ளி, 12 நவம்பர், 2021

முந்தைய ஆட்சியின் அதே தவறை செய்கிறதா திமுக?

 தமிழ்நாட்டில் வணிக வாகனங்களுக்கு ரெட்ரோ ரிஃப்ளெக்டிவ் ஸ்டிக்கர் ஒட்டப்படுவதில், முந்தைய அதிமுக ஆட்சியின் கொள்கையைப் பின்பற்றும் திமுக அரசின் முடிவு லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் இருந்து கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு ஜனவர மாதம் எதிர்க்கட்சியாக இருந்த திமுக இந்த நடைமுறைக்கு எதிராக அதிமுக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதோடு அப்போதைய போக்குவரத்து அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியது.

வாகனங்களுக்கு ஒட்டப்படும் ரிஃப்லெக்டிவ் ஸ்டிக்கர்களை மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற 2 நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே என்று முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது. ஆனால், மாநிலத்தில் மொத்தம் 8 நிறுவனங்கள் இந்த ரிஃப்லெக்டிவ் ஸ்டிக்கர்களை உற்பத்தி செய்கின்றனர். அவை மத்திய அரசாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், ரிஃப்லெக்டிவ் ஸ்டிக்கர்களை சந்தை விலையைவிட 2,500 ரூபாய்க்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்த இரு நிறுவனங்களிடமிருந்து மட்டுமே ஸ்டிக்கர்களை வாங்குமாறு போக்குவரத்துத் துறை வாகன உரிமையாளர்களை கட்டாயப்படுத்தியது என்று லாரி சங்கம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் மொத்ஹ்டம் 4.5 லட்சம் லாரிகள் உள்ளதாக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.


கடந்த ஜனவரி மாதம் கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “8 நிறுவனங்களின் ரிஃப்லெக்டிவ் ஸ்டிக்கர்களை லாரி உரிமையாளர்கள் வாங்க அனுமதிக்காத அதிமுக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அப்போது ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்திடம் அளித்த 97 பக்க ஊழல் புகாரில், அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் சில தனிநபர்கள் இரண்டு நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக திமுக குற்றம்சாட்டியது.

ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 4 மாதங்களாக அதே கொள்கையைத் தொடர திமுக அரசு முடிவு செய்தது. அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸின் (தமிழ்நாடு) தலைவர் முருகன் வெங்கடாசலம் ஊடகங்களிடம் கூறுகையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், அவர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் வாங்கப்பட்ட பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் செல்லுபடியாகும் என்றும், எஃப்சி பெறுவதற்கு போதுமானது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால், “மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்துவதில் இருந்து மாநில அரசை தடுப்பது எது என்று நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ரிஃப்லெக்டிவ் ஸ்டிக்கர் விவகாரம் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத லாரி உரிமையாளர் ஒருவர் கூறுகையில், “16 டயர்கள் கொண்ட ஒரு லாரிக்கு 25-30 மீட்டர் ரிப்லெக்டிவ் ஸ்டிக்கர் தேவை. இதில் சுமார் 17.4 மீட்டர் மஞ்சள் ஸ்டிக்கர் இருபுறமும் ஒட்ட வேண்டும். வெள்ளை ஸ்டிக்கர் 2.2 மீட்டர் முன்புறமும், சிவப்பு ஸ்டிக்கர் 1.8 மீட்டர் பின்புறமும் ஒட்ட வேண்டும். இரண்டு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களிடம் ஸ்டிக்கருக்கு ஒரு மீட்டருக்கு 40-80 ரூபாய் கூடுதலாக வசூலிக்கின்றன. அவற்றைப் பொருத்திய பிறகு, எஃப்சிக்கான ஆவணத்தின் ஒரு பகுதியாக வாகனத்தின் படம் பதிவேற்றப்பட வேண்டும். ஆனால், இரண்டு நிறுவனங்களைத் தவிர, மற்றவர்களின் பெயர்கள் இணையதளத்தில் தேர்வுக்கு வருவதில்லை” என்று கூறினார்.

இந்த ரிஃப்லெக்டிவ் ஸ்டிக்கர் விவகாரம் குறித்து தமிழ்நாடு மணல் லாரிகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யுவராஜ் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியதாவது: “இங்கே ரிஃப்லெக்டிவ் விற்பனை செய்கிற 11 நிறுவனங்கள் உள்ளது. ஆனால், முந்தைய அரசு 2 நிறுவனங்களுக்கு மட்டும் அங்கீகாரம் அளித்து இவர்களிடம் இருந்துதான் ஸ்டிக்கர்களை வாங்கி ஒட்ட வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருக்கிற 200க்கும் மேற்பட்ட ஆர்.டி.ஓ மற்றும் வாகன ஆய்வாளர்கள் சேர்ந்து பேசி இவர்கள் ஒரு நிறுவனத்தை நியமித்து அவர்களிடம் இருந்து வாங்கித்தான் ஸ்டிக்கர்களை ஒட்டவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இதனால், தமிழ்நாட்டில் மொத்தம் 12 லட்சம் வாகனம் இருக்கிறது. அதனால், முந்தைய அரசாங்கம், இந்த 2 நிறுவனங்களிடம் மட்டும் பேசி ஸ்டிக்கர்களை வாங்குகிறார்கள் முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள் என்று நாங்கள் அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினோம். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினிடம் சென்று ரூ.1,230 கோடி முறைகேடு நடந்துள்ளதாக கூறினோம்.

அதற்கு பிறகு, திமுக அரசு வந்த பிறகு முதலில் ஓரிரு மாதம் அப்படியே இருந்தது. இப்போது, இவர்களும் முந்தைய அரசு மாதிரியே வசூல் செய்கிறார்கள்.

இந்த 2 நிறுவனங்களின் ஸ்டிக்கர்களுக்கும் மற்ற 9 நிறுவனங்களின் ஸ்டிக்கர்களுக்கும் தரத்தில் எந்த மாறுபாடும் இல்லை. எல்லாம் ஒரே மாதிரியானவைத்தான்.

வாகனங்களுக்கு ரிஃப்லெக்டிவ் ஸ்டிக்கர் ஒட்டுவதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து, ரூ.3,500 பணம் வாங்குவதை வீடியோ ஆதாரத்துடன் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம். அதற்கு ரசீது கொடுத்துள்ளார்கள். ஒரு வண்டிக்கு கூடுதலாக 2,000 ரூபாய் வாங்குகிறார்கள். தமிழ்நாட்டில் 12 லட்சம் வாகனங்கள் உள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை இந்த நடைமுறை நடைபெறுகிறது. திமுக அரசு இந்த முறைகேடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இந்த அரசு எப்படி இருக்கிறது என்றால், நாம் எம் சாண்ட் சரியில்லை என்று சொன்னால், நாம் யாரை குற்றம்சாட்டுகிறோமோ அவர்கள் மறுநாள் அமைச்சரை சென்று பார்க்கிறார்கள். அதனால், தொடர்கிறது. எம் சாண்ட் தரமில்லை. 4,000 கிரஷர்களின் அனுமதி இல்லாமல் எம் சாண்ட் தயாரிக்கப்படுகிறது என்று கூறுகிறோம். ஆனால், அது தொடர்ந்து நடந்துகொண்டேதானே இருக்கிறது. புளியந்தோப்பு கட்டடம் முறைகேடுக்கு காரணம் எம் சாண்ட் அனுமதி இல்லை. வெறும் 326 பேருக்கு மட்டுமே எம் சாண்ட் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் எல்லோரும் அனுமதி இல்லாமல் எம் சாண்ட் தயாரிக்கிறார்கள். இதில் நடைபெறும் முறைகேடுகளைப் பற்றி புகார் கூறினால். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் துரைமுருகனைப் போய் பார்க்கிறார்கள். அது மறுபடியும் தொடர்கிறது. முந்தைய அதிமுக அரசிடம் எவ்வளவு கொடுத்தீர்கள் இப்போது கூடுதலாக எவ்வளவு கொடுப்பீர்கள் என்ற அளவில்தான் போய்க்கொண்டிருக்கிறது.” என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்த ரிஃப்லெக்டிவ் ஸ்டிக்கர் குறித்து ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த கூடுதல் போக்குவரத்து ஆணையர் எம்.மணகுமார் கூறுகையில், “இந்த பிரச்னை தொடர்பாக லாரி உரிமையாளர்களிடம் இருந்து மனு பெறப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-govt-follows-past-aiadmk-on-reflective-stickers-for-vehicles-lorry-owner-association-condemns-367809/

Related Posts: