சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில், பொதுமக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளதோடு, மருத்துவ முகாம்கள், நிலவேம்பு குடிநீர், தடுப்பூசி செலுத்துதல், கோவிட் பரிசோதனை, டெங்கு பரவாமல் தடுக்க கொசு மருந்து தெளிப்பு என பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் சுகாதாரப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
சென்னையில் நவம்பர் 4ம் தேதி முதல் தொடர் மழை பெய்து வருகிறது. நவம்பர் 5ம் தேதி ஒரே இரவில் பெய்த மழையால், சென்னையில் தண்டையார்பேட்டை, பெரம்பூர், வேளச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. பல இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வை செய்து துரிதப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து அறிவித்தார்.
அதே நேரத்தில், சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்கள் உணவின்றி தவிக்கக் கூடாது என்பதற்காக சென்னை மாநகராட்சி நிர்வாகம் உணவுப் பொட்டலங்கள் தயார் செய்து பொதுமக்களுக்கு விநியோகித்தது. உணவு சமைப்பதற்காக, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மிகப் பெரிய சமையல் மையம் அமைக்கப்பட்டு உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்று (நவம்பர் 9) காலை வரை பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகத்தால் பொதுமக்களுக்கு 4.35 லட்சம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி 15 மண்டலங்களிலும் உணவு தயாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி கொண்டிருக்கிறது. சோழிங்கநல்லூர் மண்டலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலை சிற்றுண்டியினை மண்டல கண்காணிப்பு அலுவலர் கே.வீரராகவராவ் ஐ.ஏ.எஸ் இன்று வழங்கினார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் கொசு ஒழிப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
சென்னை தொடர் கன மழை பெய்துள்ளதால், சென்னையில் உள்ள மக்களுக்கு மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்கும் விதமாக பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் இன்று (நவம்பர் 9) சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் இலவச மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள ரங்கராஜபுரம், ஜெயலட்சுமிபுரம் மெயின் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் இலவச மருத்துவ முகாம்களை நடத்தியது. மருத்துவ முகாமில் சென்னையில் வசிக்கும் மக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில், வில்லிவாக்கம் மருத்துவ நிவாரண முகாமில் இணை ஆணையர் சுகாதார ஆய்வு மேற்கொண்டார். அங்கே நடைபெற்ற மருத்துவ முகாமில் பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படுள்ளது என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் பாதித்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சி சுகாதாரப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அதே போல, மழை வெள்ளம் பாதிப்பால் சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளில், பாலங்களில் வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளில் இருந்து வெள்ள நீரை வெளியேற்ற புகார்கள் தகவல்களைப் பெற்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கபாதையில் நேற்று (நவம்பர் 08) இரவு முழுவதும் மோட்டார் பம்பு கொண்டு மழைநீர் வெளியேற்றப்பட்டது என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டடலம், வார்டு 35. கே.கே.டி நகரில் தேங்கிய மழைநீர் டீசல் என்ஜின் பம்புகள்கொண்டு வெளியேற்றப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு 58ல் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் மோட்டார் பம்புகள்கொண்டு மழைநீர் வடிகால்களின் வெளியேற்றப்படும் பணிகளை மண்டல கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரி ரவிகுமார் ஐ.ஏ.எஸ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னையில் மழை வெள்ளம் பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க செல்போன் எண்களை சென்னை நாகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை, வெள்ளப் பாதிப்பு, மரக்கிளைகள் அகற்றம் தொடர்பான புகார்களை 9445477205 9445025818, 9445025820 மற்றும் 9445025821 ஆகிய வாட்ஸ் ஆப் எண்களில் தெரிவிக்கலாம் செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை நீர் வடிகால் கால்வாய்களில் ஏதேனும் அடைப்புகள் இருப்பாதாக புகார்கள் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம், சென்னையில் மழை வெள்ளம் பாதிப்பு தொடர்பாக எடுத்துவரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ட்விட்டரில் தெரிவித்து வருகிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-flood-gcc-is-organizing-relief-medical-camps-in-all-the-200-divisions-366943/