புதன், 10 நவம்பர், 2021

முன்னாள் அமைச்சர்களை கடுமையாக சாடிய திமுக அமைச்சர்கள்… சூடுபிடித்த வார்த்தைப் போர்!

 9 11 2021 தொடர் கனமழை பொழிவால் சென்னையின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டதையடுத்து, மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் இல்லை என்று விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், டி.ஜெயக்குமார் ஆகியோரை தற்போதைய அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், பி.மூர்த்தி ஆகியோர் கடுமையாக சாடியுள்ளனர்.

“2015-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னையை மழை வெள்ளம் கடுமையாகப் பாதித்தது. 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டபோது ஏற்பட்ட பாதிப்புகளை தவிர்க்க, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏரியில் இருந்து வெளியேறும் நீரை கண்காணிக்க நிபுணர் குழுவை அமைத்தார்.” என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு கடும் பதிலடி கொடுத்தார்.

நீங்கள் (அதிமுக) ஆட்சியில் இருந்தபோது ஏற்பட்ட பாதிப்புகளை சென்னை மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மாநில மக்களும் மறக்கவில்லை,” என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார். மேலும், சென்னை மற்றும் டெல்டா பகுதி மக்கள் 10 நாட்களாக மின்சாரம் இன்றி எதிர்கொண்ட போராட்டங்களை மறக்கவில்லை என்றும் அதிமுக ஆட்சியின்போது மாநிலத்தில் புயல் தாக்கியபோது மக்கள் வீட்டின் மேல் தளங்களில் அமர்ந்து உணவுக்காக காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாநில அரசு ஆட்சிக்கு வந்தது முதல் 5 மாதங்களில் மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்வதன் மூலம் வெள்ளம் மற்றும் பிற இயற்கை பேரிடர்களை கையாள்வதில் தயார்நிலையில் இருந்தது என்பதை எடுத்துரைத்தார். இதனால், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தண்ணீர் விரைவாக வெளியேறுகிறது என்று கூறினார்.

மதுரையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குளங்கள் மற்றும் ஏரிகளுக்கு மழை நீர் வருவதை உறுதி செய்யும் வகையில், திங்கள்கிழமை மதுரையில் கால்வாய் சுத்தப்படுத்தும் பணிகளை அமைச்சர் மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மூர்த்தி, ஏரிகள் நிரம்பி வருவதை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். ஞாயிற்றுக்கிழமை வரை என்ன செய்ய வேண்டும் என்று அமைச்சர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார் என்று கூறினார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்காத அதிமுக ஆட்சி போல இந்த ஆட்சி இல்லை. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து அனுமதி பெறவில்லை என்று கூறுகிறார்கள். கடைசியில் வெள்ளம் ஏரியின் கரையை உடைத்துவிட்டது.” என்று அமைச்சர் மூர்த்தி கூறினார். மேலும், சென்னையில் பெய்த மழை திமுக ஆட்சியை அம்பலப்படுத்தியுள்ளதாக அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்த விமர்சனத்துக்கு, அமைச்சர் மூர்த்தி “சென்னையில் எவ்வளவு நேரமாக மழை பெய்தது என்பது மக்களுக்குத் தெரியும்” என்று பதிலளித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-ministers-kkssr-ramachandran-and-p-moorthy-retaliation-to-aiadmk-senior-leaders-on-monsoon-preparedness-366787/

Related Posts: