செவ்வாய், 14 டிசம்பர், 2021

170 பொறியியல், மருத்துவம், சட்ட, வேளாண் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்ப்பு

  பொறியியல், மருத்துவம், சட்டம், கால்நடை மருத்துவம், வேளாண் பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள் மிக விரைவில் தங்களின் பாட புத்தகங்களை தமிழில் பெற உள்ளனர். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மொழிப் பெயர்ப்பிற்காக 170 புத்தகங்களை அடையாளம் கண்டுள்ளது. பெங்குயின், பியர்சொ, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், ஓரியண்ட் ப்ளாக்ஸ்வான், எல்ஸ்வியர், மெக்ரோ ஹில் மற்றும் உள்ளூர் பதிப்பகமான கல்யாணி போன்ற புகழ்பெற்ற பதிப்பகங்களின் புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்து முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ் அசல் வெளியீட்டாளர்கள் மற்றும் பாடநூல் கழகத்தால் கூட்டாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து மூத்த பேராசிரியர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்ப்பு திட்டத்திற்காக இணைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக, ஜூன் 2022-க்குள் தமிழில் 50 பாடப்புத்தகங்கள் வெளியிடப்படும். அடுத்த கட்டமாக மேலும் 50 பாடப்புத்தகங்கள் மொழிபெயர்க்கப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழகத்தின் துணை இயக்குநர் (மொழிபெயர்ப்புகள்) டி சங்கர சரவணன் தெரிவித்தார்.

இந்த புத்தகங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு தமிழில் கிடைக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம். சர்வதேச மற்றும் தேசிய வெளியீட்டாளர்களின் அட்டவணையில் இந்த புத்தகங்கள் தமிழிலும் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புத்தகங்கள் பல ஆண்டுகளாக அச்சில் இருப்பதை உறுதி செய்யும். அதே போன்று புதிய சந்தை கிடைப்பதால் பதிப்பகத்தாரும் மகிழ்ச்சி அடைகின்றனர் என்று அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக நூலகங்களில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புத்தகத்திலும் 150 புத்தகங்களைப் பெற்று கல்லூரிகளுக்கு விநியோகம் செய்ய இருப்பதாக உயர்க் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் தனியாக பிரதிகளைப் பெற விரும்பினால், பாடநூல் கழகத்திடம் வாங்கிக் கொள்ள இயலும்.

தற்போது தமிழக முதல்வரின் செயலாளராக பணியாற்றும் உதய சந்திரன் 2017ம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை செயலாளராக இருந்த போது தமிழ் மொழிபெயர்ப்பு திட்டத்தை உருவாக்கினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட்-19 தொற்றுநோய்களின் போது மாணவர்கள் படிக்கும் பழக்கத்தை இழந்துள்ளனர் என்பது கல்வித்துறை வட்டாரங்கள் அறிந்ததே. மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு 8 முதல் 12 பக்கங்கள் கொண்ட சிறுகதை புத்தகங்களை வெளியிடவும் தமிழ்நாடு பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது. இளந்தளிர் இலக்கிய திட்டம் என்ற பெயரில் ஏற்கனவே 50 கதைகள் தேர்வு செய்யப்பட்டு அச்சிற்கு தயார் நிலையில் உள்ளது. இந்த புத்தகங்கள் பள்ளி நூலகங்களுக்கு அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/muthamizh-arignar-translation-project-170-books-on-professional-courses-to-be-translated-into-tamil-382277/