செவ்வாய், 14 டிசம்பர், 2021

வனப்பகுதியில் தேடும் பணியை தீவிரப்படுத்தும் STF

 Tamil Nadu Chopper Crash : இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் எம்.ஐ. 17வி5 புதன்கிழமை அன்று குன்னூர் அருகே விபத்தில் சிக்கி எரிந்து சாம்பலானது. இந்திய முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 நபர்களில் 13 நபர்கள் உயிரிழந்தனர். விபத்திற்கான காரணம் என்ன என்பதை தொடர்ந்து விசாரித்து வருகிறது இந்திய ராணுவம்.

ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட இடத்தை ராணுவ கட்டுபாட்டில் கொண்டு வந்து அங்கு பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏர் மார்ஷெல் மானவேந்தர் சிங் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகின்றன் நிலையில் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டரின் (Wellington MRC) கமாண்டண்ட் ராஜேஷ்வர் சிங் நேரில் ஆய்வுகளை மேற்கொண்டார்.

இன்று காலை முதல் எரிந்த ஹெலிகாப்டரின் பாகங்களை உடைத்து எடுத்துச் செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் விமானப்படையினர், ராணுவ வீரர்கள் மற்றும் குன்னூர் தீயணைப்பு துறையினர் ஈட்பட்டு வருகின்றனர்.

விசாரணை தொடர்பாக நேற்று மாலை நீலகிரி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹெலிகாப்டர் விபத்தை கடைசியாக படம் பிடித்த நபரின் கைபேசியை காவல்துறையினர் பறிமுதல் செய்து கோவை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. கேத்தி பள்ளத்தாக்கு அருகே சென்று கொண்டிருந்த போது கோவையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் தன்னுடைய செல்போனில் பதிவு செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவருடைய கைபேசி கைப்பற்றி ஆய்வு செய்ய அனுப்பப்பட்டது.

அதே போன்று விபத்து நடந்த பகுதியில் உயர் மின்னழுத்த கம்பிகள் ஏதேனும் போடப்பட்டுள்ளதா, விபத்தால் சேதமாகியுள்ளதா என்பதை அறிய நீலகிரி மாவட்ட மின்சாரத் துறைக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே இருக்கும் வனப்பகுதியை ஆய்வு செய்ய சிறப்பு படைப் பிரிவு (Special Task Force) தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அன்றைய நாளின் வானிலை குறித்து அறிந்து கொள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வை நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டு வருவதாக அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை சார்பில் ஏடி எஸ்பி முத்துமாணிக்கம் தலைமையில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-chopper-crash-army-and-iaf-breaking-and-collecting-the-charred-helicopter-parts-382301/