செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

போட்டி நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள ‘ஜீப் காம்பஸ்’ எஸ்யூவி கார் : என்ன விஷேசம்? August 01, 2017

​ போட்டி நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள ‘ஜீப் காம்பஸ்’ எஸ்யூவி கார் : என்ன விஷேசம்?


கார் பிரியர்களிடையே நெடுங்காலமாக அதிக ஆவலை தூண்டிவந்த ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் எஸ்யூவி கார் தற்போது இந்தியாவில் மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

ஜீப் நிறுவனத்தின் பயோடேட்டா:

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஃபியட் கிறைஸ்லர் குழுமத்தின் ஒர் அங்கமே ஜீப் நிறுவனம். இது 1941ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் பல நாடுகளில் தனது சந்தையை விரிவாக்கம் செய்துள்ள ஜீப் நிறுவனம் கடந்த ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்தது.

ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட செரோகி மற்றும் ரேங்லர் ஆகிய இரண்டு மாடல்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்தது ஜீப் நிறுவனம், இதன் காரணமாக அதிக விலை கொண்டதாக இருந்ததால் இந்திய சந்தையில் பெரிய அளவிலான தாக்கத்தை இந்நிறுவனத்தால் ஏற்படுத்த முடியாமல் இருந்து வந்தது.



இந்நிலையில் தனது நிறுவனத்தை இந்தியாவில் வலுவாக காலூண்ற எண்ணிய ஜீப் நிறுவனம், புனே - ரஞ்சன்கோனில் உள்ள ஃபியட் கிறைஸ்லர் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் ஜீப் காம்பஸ் எஸ்யூவியை தயாரிக்கத்தொடங்கியது. முற்றிலும் உள்நாட்டிலேயே ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட காம்பஸ் எஸ்யூவியை ஜீப் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் ஜீப் நிறுவன மாடலாகவும் காம்பஸ் எஸ்யூவி இருக்கிறது. இதன் காரணமாக மிகவும் சவாலான விலையில் காம்பஸ் எஸ்யூவி அறிமுகமாகலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், எதிர்பார்ர்புகளை பூர்த்தி செய்யும் விதமாக ஆட்டோமொபைல் துறை வல்லுநர்களின் கணிப்பையும் பொய்யாக்கும் வகையில் இந்த எஸ்யூவியின் விலையை நிர்னயித்துள்ளது ஜீப் நிறுவனம்.

வேரியண்டுகள்:

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி ஸ்போர்ட், லான்ஜிடியூட் மற்றும் லிமிடெட் என்ற மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். 4 வீல் டிரைவ் ஆப்ஷன் டீசல் வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும்.


டிசைன்:

ஜீப் நிறுவனத்தின் பாரம்பரிய 7-ஸ்லாட் க்ரில் அமைப்பு மற்றும் டிசைன் தாத்பரியங்களுடன் மிக நேர்த்தியான எஸ்யூவி மாடலாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த எஸ்யூவி வாடிக்கையாளர்களை கவர்வதற்கு டிசைன் முக்கிய காரணமாக இருக்கும்.


சிறப்பு அம்சங்கள்:

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் எல்இடி பகல்நேர விளக்குகள், 16 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. கூரை பிரத்யேக வண்ணத்தில் இரட்டை வண்ணக் கலவையுடன் கிடைக்கும். இன்டீரியரில் இரட்டை வண்ணக் கலவையிலான உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கருப்பு மற்றும் சாம்பல் வண்ண இன்டீரியர் பாகங்களும் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும்.

இந்த காரில் 5 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேரை சப்போர்ட் செய்யும் வசதி இருக்கிறது. டாப் வேரியண்ட்டுகளில் எச்ஐடி ஹெட்லைட்டுகள், டியூவல் ஸோன் ஏசி சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார், கீ லெஸ் என்ட்ரி போன்றவை முக்கியமானதாக குறிப்பிட முடியும்.


எஞ்சின் விவரம்:

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 162 பிஎஸ் பவரையும், 250என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 173 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 2.0 லிட்டர் மல்டிஜெட்-II டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ஆப்ஷன்களில் வருகிறது.

பெட்ரோல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களிலும், டீசல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. டீசல் மாடலில் மட்டுமே ஜீப் ஆக்டிவ் ஃபோர் வீல் டிரைவ் சிஸ்டம் கிடைக்கும். 

டிரைவ் ஆஃஷன்கள்:

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் ஆஃப்ரோடு எனப்படும் கடினமான நிலப்பரப்புகளில் பயன்படுத்துவதற்கான ஜீப் ஆக்டிவ் டிரைவ் மற்றும் செலக்- டெர்ரெயின் டிராக்ஷன் மேனெஜ்மென்ட் சிஸ்டம் ஆகிய தொழில்நுட்பங்களுடன் இணைந்து செயல்படும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.


பாதுகாப்பு அம்சங்கள்:

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், பிரேக் பவரை சரி விகிதத்தில் பிரித்து சக்கரங்களுக்கு செலுத்தும் இபிடி, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அதிக நிலைத்தன்மையுடன் காரை செலுத்தும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட 50 பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்று இருக்கின்றன. இந்தியாவின் மிகுந்த பாதுகாப்பு மிக்க எஸ்யூவி மாடல்களில் ஒன்றாகவும் கூறலாம்.


வண்ணங்கள்:

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி 6 வண்ணங்களில் கிடைக்கிறது. அவை
  • ஹைட்ரோ புளூ (Hydro Blue)
  • எக்ஸோடிக்கா ரெட், (Exotica Red)
  • பிரில்லியண்ட் பிளாக் (Brilliant Black)
  • வோக்கல் ஒயிட்  ( Vocal White)
  • மினிமல் க்ரே (Minimal Grey) 
விலை விபரம்:

புதிய ஜீப் காம்பஸ் ரூ.14.95 லட்சம் முதல் ரூ.20.65 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் வேரியண்ட் வாரியான விலை விபரத்தை கீழே உள்ள பட்டியலில் காணலாம்.

டீசல் மாடல்:
  • ஸ்போர்ட் - ரூ. 15.45 லட்சம் 
  • லான்ஜிடியூட் - ரூ. 16.45 லட்சம் 
  • லான்ஜிடியூட் ஆப்ஷன் - ரூ. 17.25 லட்சம் 
  • லிமிடெட் - ரூ. 18.05 லட்சம் 
  • லிமிடெட் ஆப்ஷன் - ரூ. 18.75 லட்சம் 
  • லிமிடெட் 4x4 - ரூ. 19.95 லட்சம் 
  • லிமிடெட் ஆப்ஷன்  4x4 - ரூ.20.65 லட்சம்
பெட்ரோல் மாடல்:
  • ஸ்போர்ட் - ரூ.14.95 லட்சம் 
  • லிமிடெட் - ரூ.18.70 லட்சம் 
  • லிமிடெட் ஆப்ஷன் - ரூ.19.40 லட்சம்
புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டருக்கான வாரண்டி வழங்கப்படுகிறது. டீலர் எண்ணிக்கை மற்றும் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்துவதற்கான முயற்சிகளும் தீவிரமாக நடந்து வருவதாக ஜீப் நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூ500 கார்களுக்கு புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி நேர் போட்டியாக இருக்கும். மிகவும் சவாலான விலையில் வந்துள்ளதால் ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் எஸ்யூவி போட்டி நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.