நீட் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்த பட்டியலை வெளியிட்டார்.
ஓசூர் மாணவர் சந்தோஷ் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். கோவையை சேர்ந்த மாணவர் முகேஷ் கண்ணா 2ம் இடத்தையும், திருச்சியைச் சேர்ந்த மாணவர் சையத் ஹபீஸ் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். தரவரிசை வெளியிடப்பட்டுள்ள நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நாளை கலந்தாய்வு தொடங்க உள்ளது. மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் கலந்தாய்வுக்கான அழைப்பு விடுக்கப்படும் என, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இன்று வெளியிட்ட பட்டியலின்படி, முதல் 20 இடங்களில், 15 இடங்களை சிபிஎஸ்இ மாணவர்கள் பிடித்தனர். முதல் 20 இடங்களைப் பிடித்துள்ள மாணவர்களில் 5 பேர் மாநிலக்கல்வி பாடத்திட்டத்திலும், 2 பேர் சர்வதேசக் கல்வி பாடத்திட்டத்திலும் படித்தவர்கள் ஆவர்.