வியாழன், 10 ஆகஸ்ட், 2017

சென்னையில் துப்பாக்கிகள் விற்கும் கும்பல் சிக்கியது! August 10, 2017




சென்னையில் கூலிப்படை மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு துப்பாக்கி விநியோகம் செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூரில் கடந்த மாதம் துப்பாக்கியுடன் திரிந்த தீபன் என்ற வழக்கறிஞரை, ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் குமார் என்பவரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கியதாக தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து குமார் வேலூரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர் குமாரை தொடர்புகொண்டு, துப்பாக்கி வாங்கும் நபர்கள் போல போலீசார் பேரம் பேசினர். 

குமார் தனது கூட்டாளிகளுடன்,  சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள தனியார் விடுதியில் வந்து தங்கியுள்ளார். திட்டமிட்டபடி அங்கு வந்த தனிப்படை போலீசார், துப்பாக்கி வாங்குவது போல் நடித்து, அதிரடியாக உள்ளே நுழைந்து, துப்பாக்கி முனையில் மதுராந்தகத்தைச் சேர்ந்த குமார், பிரகாஷ், கோபிநாத் மற்றும் முருகன் ஆகிய நால்வரை கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து, 9MM பிஸ்டல் ரக துப்பாக்கி, 7 குண்டுகள் மற்றும் குண்டுகள் அடங்கிய பெட்டி ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் இந்த கும்பலுக்கு குமார்தான் தலைவன் என்பதும் இவர்கள் பல ரவுடிகள், கூலுப்படையினர் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு துப்பாக்கிகள் சப்ளை செய்ததும் தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.