வியாழன், 24 ஆகஸ்ட், 2017

நீட் குறித்து மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! August 23, 2017

நீட் குறித்து மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!


மருத்துவ மாணவர் சேர்க்கையில் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.  

இதுதொடர்பாக உடுமலைபேட்டையை சேர்ந்த மாணவி கிருத்திகா தொடர்ந்த வழக்கில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 199.25 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற நிலையிலும், மருத்துவ இடம் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தமக்கு உரிய தீர்வு அளித்து மருத்துவம் படிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், நீட் விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்.

2 விதமான பாடத்திட்டங்கள் இருக்கும்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை வைத்து மட்டும் வினாத்தாள் தயாரித்தது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதி, நடுநிலை அமைப்பை உருவாக்கி வினாத்தாள் தயாரித்திருக்கலாம் என கூறினார். நீட் விவகாரத்தில் தமிழக அரசை குறைகூற முடியாது என தெரிவித்த நீதிபதி கிருபாகரன், கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு நீட் தேர்வில் விலக்கு கேட்பது வேதனை அளிப்பதாக கூறினார்.